முடிவுக்கு வந்த நஜிப்பின் வீட்டுக்காவல் விவகாரம்! நீதிமன்றம் புதிய உத்தரவு!
- Shan Siva
- 11 Nov, 2026
கோலாலம்பூர், நவ 11: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடர்பான உத்தரவில் திருத்தம் செய்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நஜிப் ரசாக்கின் 5 கோடி ரிங்கிட் அபராதம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 6ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட விடுதலை உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக, SRC International ஊழல் வழக்கில் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி வழங்கியுள்ளது.
நீதிபதி அஸ்லாம் ஜைனுடின் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதன்படி, நஜிப் ரசாக் கோலாலம்பூர் தாமான் டூத்தாவில் உள்ள தனது இல்லத்தில் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் இருக்க வேண்டும்.
நவம்பர் 6ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் சட்டரீதியான சில பிழைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய சட்டத்துறை தலைமை அலுவலகம், அதனைத் திருத்தி புதிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தது.
அப்போது ஆஜரான துணை அரசு வழக்கறிஞர், 5 கோடி ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தியதால் நஜிப் விடுவிக்கப்பட வேண்டும் என்ற பொருளில் முந்தைய உத்தரவு அமைந்திருந்ததாகவும், அது மாமன்னர் வழங்கிய நிபந்தனையுடனான மன்னிப்புக்கு முரணானது என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, வீட்டுக் காவல் காலம் முடிவடைந்த பின்னர், 1MDB வழக்கில் விதிக்கப்பட்டுள்ள 15 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்காக நஜிப் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி மீண்டும் காஜாங் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்ற விவரமும் புதிய உத்தரவில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடர்பான சட்ட நடைமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

