வடகொரியா பாணியை கையில் எடுத்த பாகிஸ்தான்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்காவின் முக்கிய நிலப்பகுதிகளைத் தாக்கும் வகையில், 11,000 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) பாகிஸ்தான் உருவாக்கி வருவதாக அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட் உளவுத்துறைக் குழுவிடம் 2026-ஆம் ஆண்டிற்கான 'ஆண்டுக்கால அச்சுறுத்தல் மதிப்பீட்டு' அறிக்கையை துளசி கப்பார்ட் சமர்ப்பித்தார். அதில், ரஷியா, சீனா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து, அமெரிக்காவை எட்டும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானையும் அவர் சேர்த்துள்ளார்.

பயங்கரவாதத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் பாகிஸ்தானிடம் தற்போது 'ஷாகீன்-3' (Shaheen-3) என்ற 2,750 கி.மீ தூரம் பாயும் ஏவுகணையே மிக நீண்ட தூரம் செல்லக்கூடிய ஆயுதமாக உள்ளது. இது இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகள் வரை தாக்கக்கூடியது. ஆனால், அமெரிக்காவைத் தாக்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் 11,000 கி.மீ தூரம் பாயும் ஏவுகணை தேவை. இதற்கான தீவிர முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் அணுஆயுதக் கொள்கை எப்போதும் இந்தியாவை மட்டுமே மையமாகக் கொண்டது என்று அந்நாடு கூறி வருகிறது. இருப்பினும், அமெரிக்கா ஏன் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது என்பதற்குப் பாதுகாப்பு வல்லுநர்கள் இரு காரணங்களைக் கூறுகின்றனர்: எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் ஏற்பட்டால், அமெரிக்கா இந்தியாவின் பக்கம் நின்று தலையிடக் கூடாது என மிரட்டுவதற்காக இந்த ஏவுகணைத் தயாரிப்பு இருக்கலாம்.

அணுஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வைத்துள்ள வடகொரியா மீது அமெரிக்கா நேரடியாகத் தாக்குதல் நடத்த அஞ்சுவதைப் பார்த்து, பாகிஸ்தான் இந்த உத்தியைக் கையாள்கிறது. அமெரிக்காவின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர்.

இது வெறும் யூகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அறிக்கை என்றும், பாகிஸ்தானின் அணுஆயுதப் பாதுகாப்புத் திறன் எப்போதும் தற்காப்பு நோக்கத்திற்காகவே உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பாகிஸ்தான் இத்தகைய ஏவுகணையைத் தயாரித்து நிலைநிறுத்த இன்னும் ஒரு தசாப்த காலம் (10 ஆண்டுகள்) ஆகலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் கணித்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *