உயர்ந்த நிலையில் மலேசியா -சீனா இராஜதந்திர உறவு! - அன்வார்
- Shan Siva
- 26 Sep, 2026
கோலாலம்பூர், செப் 26: ஷாங்காய் மற்றும் ஹாங்சூ நகரங்களுக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் மேற்கொண்ட பயணம், மலேசியா சீனாவில் முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் புதிய வழிகளைத் திறந்துவிட்டுள்ளது; இது இரு நாட்டு மக்களுக்கும் கூட்டுப் பலன்களை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வேர்ல்ட் ஸ்கில்ஸ்' (WorldSkills) போட்டி மற்றும் உச்சிமாநாடு, அத்துடன் 'குளோபல் டிஜிட்டல் டிரேட் எக்ஸ்போ' (GDTE) ஆகியவற்றில் மலேசியா பங்கேற்றதன் மூலம், சர்வதேச அரங்கில் நாட்டின் திறன்கள் வெளிப்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
மலேசியா மற்றும் சீன மக்களுக்குப் பொதுவான நன்மைகளையும் செழிப்பையும் கொண்டுவரும் வகையிலான முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை முன்னெடுப்பதில் இது முக்கியப் பங்காற்றியுள்ளது என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனித விழுமியங்களைப் பாதிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்த மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டையும் அன்வார் எடுத்துரைத்தார்.
மேலும், மிகவும் நியாயமான மற்றும் சமத்துவமான உலகத்தை உருவாக்க, உலகளாவிய போட்டி மற்றும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியிலும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
மலேசியா-சீனா இடையிலான இராஜதந்திர உறவுகள் தற்போது மிக உயர்ந்த நிலையில் இருப்பதாகவும், வாய்ப்புகளை ஆராய்வதற்கும் புதிய ஒத்துழைப்புத் துறைகளை உருவாக்குவதற்கும் இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

