மலேசியர்களின் 10 ஆண்டுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட் விவகாரம் – குடிநுழைவுத் துறை முக்கிய அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 12: மலேசிய குடிநுழைவுத் துறை, 10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்களை தற்காலிகமாக வழங்குவதை நிறுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் சில விமான நிறுவனங்களின் செக்-இன் கவுன்டர்களில், இத்தகைய பாஸ்போர்ட்களை வைத்திருந்த மலேசியப் பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம், சில விமான நிறுவனங்களிடையே நிலவிய குழப்பம்தான்என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஜக்காரியா ஷாபான் தெரிவித்தார்.

பொதுவாக, சர்வதேசப் பயணத்திற்கு பாஸ்போர்ட்டில் குறைந்தது 6 மாத செல்லுபடியாகும் காலம் இருக்க வேண்டும் என்ற விதிமுறையுடன், 10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் தொடர்பான விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தியதாக அவர் விளக்கினார்.

இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பான ICAO-விடம் குடிநுழைவுத் துறை விளக்கம் கேட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருப்பதில் எந்தத் தடையும் இல்லை என்பது ICAO-வின் உறுதிப்படுத்தலில் தெரியவந்துள்ளதாக ஜக்காரியா தெரிவித்தார்.

எனினும், பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் வரை, அதிகபட்சம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்கள் மட்டுமே வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும், ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கும் மேலான செல்லுபடியாகும் காலத்துடன் பாஸ்போர்ட் பெற்றுள்ள மலேசியர்கள், தங்களது பாஸ்போர்ட்டை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மலேசியப் பயணிகள் மீண்டும் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இந்த விவகாரம் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு பதிவின்படி, ஜிம்பாப்வேயில் இருந்து மலேசியா திரும்பிய சில பயணிகள், தங்களது பாஸ்போர்ட் 10 ஆண்டுகள் 6 மாதங்கள் செல்லுபடியாக இருந்ததால் சிக்கலை எதிர்கொண்டதாகக் கூறப்பட்டது. அவர்கள் பழைய பாஸ்போர்ட் காலாவதியாகும் 6 மாதங்களுக்கு முன்பே புதுப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *