அமெரிக்காவை அபாரமாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம்
- Surendran Sumdraraj
- 07 Jul, 2026
சியாட்டில், ஜூலை 7 –
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 16-ஆவது சுற்றில், பெல்ஜியம் அணி இணை ஏற்பாட்டாளரான அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
சியாட்டில் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆட்டத்தின் 9-ஆவது நிமிடத்தில் சார்லஸ் டி கெட்டலாரே முதல் கோலை அடித்து பெல்ஜியத்திற்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
எனினும், 31-ஆவது நிமிடத்தில் மாலிக் டில்மேன் கோல் அடித்து அமெரிக்காவுக்குச் சமநிலையை ஏற்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து, 33-ஆவது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்த டி கெட்டலாரே, பெல்ஜியத்தை 2-1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
இரண்டாவது பாதியில், 57-ஆவது நிமிடத்தில் ஹான்ஸ் வனாகன் மூன்றாவது கோலைப் பதிவு செய்தார். ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+3-ஆவது நிமிடத்தில் ரொமேலு லுகாகு இறுதி கோலை அடித்து பெல்ஜியத்தின் 4-1 என்ற அபார வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் பெல்ஜியம் உலகக் கோப்பை காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. மறுபுறம், சொந்த ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய அமெரிக்கா தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



