போஸ்னியாவை வீழ்த்தி 16-ஆவது சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா
- Surendran Sumdraraj
- 02 Jul, 2026
சாண்டா கிளாரா, ஜூலை 2 –
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 32 அணிகள் சுற்றில், அமெரிக்கா அணி 2-0 என்ற கோல் கணக்கில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை வீழ்த்தி 16-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் பாதி முடிவதற்கு சற்று முன் 45-ஆவது நிமிடத்தில் ஃபோலரின் பாலோகன் கோல் அடித்து அமெரிக்காவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
எனினும், இரண்டாவது பாதியின் 64-ஆவது நிமிடத்தில் எதிரணி வீரரின் காலில் மிதித்ததற்காகப் பாலோகனுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டதால், அமெரிக்கா மீதமுள்ள நேரத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால், ஆள் பற்றாக்குறையிலும் அமெரிக்கா சிறப்பாக ஆடியது. 84-ஆவது நிமிடத்தில் மாலிக் டில்மேன் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா 16-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அடுத்த சுற்றில் அமெரிக்கா, செனகலை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முன்னேறிய பெல்ஜியத்தை எதிர்கொள்ள உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



