'மே பேங்க்' பணப் பட்டுவாடா இயந்திரத்தில் தமிழையும் இணைக்க வேண்டும்! சமூக ஆர்வலர் ஆறுமுகம் பிள்ளை வேண்டுகோள்
- Shan Siva
- 07 Oct, 2026
கோலாலம்பூர், அக் 7: மே பேங்க் பணப் பட்டுவாடா இயந்திரத்தில் மலாய், ஆங்கிலம், மெண்டரின் மொழிகள் இருப்பதைப் போல் தமிழ்மொழியையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு கடிதம் அந்த வங்கியின் தலைமையகத்திற்கு சமூக ஆர்வலர் ஆறுமுகம் பிள்ளை தலைமையில் அண்மையில் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து அவரின் இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த மே பேங் நிர்வாகம், மறு ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. பாதுகாப்புக்கான தகவலில் தமிழ்மொழியையும் இணைப்பதற்கான முக்கியத்துவத்தைப் பற்றி பரிசீலனை செய்திருப்பதை தாங்கள் கவனத்தில்கொள்வதாகவும், இந்த மறு ஆய்வுக்குக் கால அவகாசம் வேண்டும் என்றும் அந்த வங்கி கேட்டுக்கொண்டுள்ளதாகவும், சிலாங்கூர் மாநில மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவருமான ஆறுமுகம் பிள்ளை செல்லப்பா தெரிவித்தார்.
தற்போது நடப்பிலுள்ள ஒற்றுமை அரசாங்கம் மலாய்க்காரர்கள், இந்ததியர்கள், சீனர்கள் என அனைத்து இனத்தவரையும் மையமாகக் கொண்டுதான் செயல்பட்டு வருகிறது. தமிழ் நம் தாய்மொழி என்பதால் அதை வங்கிச் சேவைகளிலும் இணைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது என்று அவர் கூறினார்.
இதன் அடிப்படையில் தன்னுடைய இந்த முயற்சிக்கு நாடு முழுவதும் உள்ள இந்திய
அரசு சார்பற்ற இயக்கங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும்
அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தீபாவளி திருநாள் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், தன்னுடைய இந்த
முயற்சி நல்ல பலனைக் கொடுக்க அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் ஓர் அறிக்கையில்
குறிப்பிட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

