மலாக்கா தேர்தலில் ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிவிக்கும் அம்னோ, பாஸ்
- Shan Siva
- 23 Oct, 2026
கோலாலம்பூர், அக் 23: மலாக்கா மாநிலத் தேர்தலில், தேசிய முன்னணியும் பாஸ் கட்சியும் ஒரே மேடையில் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளன.
இதனை தேசிய முன்னணியின் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தேசிய முன்னணி சார்பில் 21 வேட்பாளர்களும், பாஸ் கட்சி சார்பில் 7 வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.
மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற தேசிய முன்னணியின் தேர்தல் தலைமைக் குழுக் கூட்டத்துக்குப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியுடன் தேசிய முன்னணியின் தேர்தல் பணிகளும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளன.
மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பாஸ் கட்சியுடனான அரசியல் ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டதாக ஜாஹிட் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், மொத்தமுள்ள 28 தொகுதிகளில் தேசிய முன்னணி 21 தொகுதிகளிலும், பாஸ் கட்சியும் அதன் அரசியல் கூட்டாளிகளும் மீதமுள்ள 7 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தேசிய முன்னணியின் பங்குக் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுவதற்குப் பொருத்தமான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதுடன், வெற்றி வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜாஹிட் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

