சனுசியின் கருத்துகள் சாதாரணமானவை அல்ல! - அசாலினா ஒஸ்மான்

top-news

சிரம்பான், ஜூலை 26: மூதாதையர் தாயகங்கள் குறித்து பெரிகாத்தான் நேஷனல் தேர்தல் இயக்குனர் சனுசி நோர் தெரிவித்த கருத்துக்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அசாலினா ஒஸ்மான் சயீத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சொல்லாடல்கள், சீன மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களுக்கு மற்றொரு தாயகம் உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்கும் என்றும், மலாய்க்காரர்கள் மட்டுமே உண்மையிலேயே மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் என்றும் அவர் கூறினார்.

உண்மை என்னவென்றால், சீன மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மலேசியர்களுக்கு, மலேசியா ஒரு இடைவழிப் பாதை அல்ல. மலேசியாதான் அவர்களின் தாயகம், என்று அவர், 'சீனர்களுக்கு சீனா, இந்தியர்களுக்கு இந்தியா, கம்போடியர்களுக்கு கம்போடியா, மலாய்க்காரர்களுக்கு மலேசியா மட்டுமே' என்ற சனுசியின் கருத்துக்குப் பதிலளித்தார்.

கூட்டாட்சி அரசியலமைப்பு இஸ்லாத்தின் நிலை, மலாய் ஆட்சியாளர்களின் அமைப்பு, மற்றும் மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிறது என்று அசாலினா கூறினார். அதே அரசியலமைப்பு, ஒவ்வொரு குடிமகனின் வம்சாவளியைப் பொருட்படுத்தாமல் அவர்களின் நியாயமான உரிமைகளையும் தகுதியையும் உறுதி செய்கிறது என்றார்.

சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தத் துறை அமைச்சராகவும் இருக்கும் அசாலினா, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான சூடான பிரச்சாரத்தின் மத்தியில், அரசியல் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரப் பணியாளர்களும் தாங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வாக்குகளைப் பெறுவதற்காக, இனம், மதம் மற்றும் அரச அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் கோபத்தையோ அல்லது அச்சத்தையோ தூண்டும் கருவிகளாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *