டிஎன்பிஎஸ்சி விவகாரத்தை கையில் எடுத்த தவெக கட்சி தலைவர் விஜய் ஆவேசம்!
- Muthu Kumar
- 09 Feb, 2026
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற குருப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (08-02-26) காலை தேர்வு நடைபெற இருந்தது.
அப்போது, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் நந்தனம் அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் காலை 9 மணியைக் கடந்தும் வினாத்தாள் வரவில்லை எனப் புகார் எழுந்தது.
இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரும்பாக்கம், நந்தனம் ஆகிய பகுதிகளில் குருப் 2 தேர்வின் போது குளறுபடி ஏற்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. சண்முகசுந்தரம் பிறப்பித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் 'அரசுப் பணி என்கிற கனவோடு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வை எழுதவிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
அரசுப் பணி என்பது, இளைஞர்கள் ஒவ்வொருவரின் உயரிய கனவும் லட்சியமும் ஆகும். அதை அடைய அவர்கள் பல ஆண்டுகளாக இரவு பகலாகக் கண்விழித்துப் படித்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவார்கள். அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உழைப்புடன் தயாராகி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமது எதிர்கால வாழ்வு குறித்த மிகப் பெரிய கனவுகளோடு முதன்மைத் தேர்வை எழுத வருவார்கள். அந்த நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டால், இவ்வளவு காலம் உழைத்த உழைப்பு வீணாகி விடுமோ என்ற அச்சம் அவர்களின் மனத்தில் ஆழப் பதிந்துவிடும்.
ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்பட்டாலும் அதற்காக மீண்டும் மீண்டும் தங்களது கடின உழைப்பை முதலீடாக்கும் சூழல் உருவாகும். இதனால் இளைஞர்களின் பொன்னான காலம் வீணாவதுடன் மனத்தளவில் அவர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.
எதிர்காலம் குறித்துக் கனவுகளோடு இருந்த இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கிய இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு யாருக்காக இயங்குகிறது? இளைஞர்களுக்கு நல்லதொரு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்காத இந்த அரசு, இருந்து என்ன பயன்? இன்று TNPSC Group 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது, இந்தக் கபட நாடகத் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பே. இன்னும் எந்த மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க இது நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழாமல் எப்படி இருக்கும்? இதற்கு உரியவர்கள், உண்மையை நேர்மையாகச் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.
எனவே, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வெற்று விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறுதி' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



