மோரிப் கடற்கரைப் பகுதியில் 5.5 மீட்டர் வரை எழும் அலைகள் சீற்றம்!
- Muthu Kumar
- 09 Nov, 2024
பந்திங் நவ.9-
நாட்டின் பருவநிலை மாற்றத்தின் காரணமாக மோரிப் கடற்கரைப் பகுதியில் 5.5 மீட்டர் வரை எழும் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் இப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை ஒத்தி வைக்கும்படி கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் ஸ்குவாட் பந்தாஸ் அவசர நடவடிக்கை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் 13.11.2024 தொடங்கி 18.11.2024 வரை தொடரும் கடற்கரையோரம் எழும் அலைகள் சீற்றத்தால் கடலில் குளிப்போர், கரையோரத்தில் வலை கட்டி மீன் பிடிப்போர், சிறு படகில் சென்று மீன் பிடிப்போர் மற்றும் கடலோரப் பகுதிகளில் முகாமிட்டு பொழுதைக் கழிக்க வருவோர் இந்த அறிவிப்பைக் கடைப்பிடித்து மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஸ்குவாட் பந்தாஸ் அவசர நடவடிக்கைக் குழுத் தலைவர் இப்ராஹிம் ஒஸ்மான் தெரிவித்தார்.
இந்தக் கால கட்டத்தில் பொது மக்கள் பாதுகாப்பு கருதி ஸ்குவாட் பந்தாஸ் குழுவினர் கடற்கரைப் பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருவார்கள் என்று அவர் கூறினார்.நாட்டின் பருவ மாற்றத்தைக் கண்காணித்து வரும் மெட் மலேசியா விடுத்துள்ள அறிக்கையின் படி மோரிப் கடற்கரைப் பகுதிக்கு வார இறுதி நாட்களில் ஓய்வெடுக்க வருவோர் இந்த அறிவிப்பைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்று இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *