குப்பையில் இருந்து உருவான கடற்கரை - இன்று உலக புகழ் பெற்ற கிளாஸ் பீச்!
- Muthu Kumar
- 11 Feb, 2026
உலகில் மிகவும் அரிய பயண தலங்களில் ஒன்றாக கிளாஸ் பீச் (Glass Beach) உள்ளது. இந்த கடற்கரை வட கலிபோர்னியாவில் பாறைகளால் சூழப்பட்ட கடற்கரையில் ஃபோர்ட் பிராக் அருகில் அமைந்துள்ளது.
ஒருகாலத்தில் இந்த பகுதி மின்சாதனங்கள், பாட்டில்கள் கொட்டப்பட்ட ஒரு இடமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில், அவை அனைத்தும் கடலலைகளால் செதுக்கப்பட்டு கண்ணாடி போன்ற அமைப்பை கொண்ட ஒரு அழகிய கடற்கரையாக மாறியுள்ளது. இதனால் இந்த இடம் பெருமளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
1906 முதல் 1967 வரை ஃபோர்ட் பிராக் பகுதியில் குடியிருந்தவர்கள் கடற்கரைப் பகுதியை அதிகாரப்பூர்வமற்ற குப்பைக் கொட்டும் இடமாக பயன்படுத்தி வந்தனர். பாட்டில்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் போன்ற அனைத்து குப்பைகளையும் கடற்கரையிலும் அதன் சுற்றி வட்டாரத்திலும் கொட்டினர். இதையடுத்து, 1967-ஆம் ஆண்டு நார்த் கோஸ்ட் வாட்டர் குவாலிட்டி வாரியம் இந்தப் பகுதியில் யாரையும் அனுமதிக்காமல் தடை செய்து வைத்தனர்.
இதையடுத்து, 1960-களில் சுத்திகரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. பெரிய குப்பைகள் அகற்றப்பட்டு, கண்ணாடி, மண் பானைகள் மற்றும் செராமிக் துண்டுகள் மட்டும் கடற்கரையில் விட்டு செல்லப்பட்டது. இதன் பின்னர் தான் இயற்கை தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. அதாவது, கடல் அலைகள் பல தசாப்தங்களாக உடைந்த கண்ணாடி துண்டுகளின் மேற்பரைப்பை மென்மையாக்கி அவற்றை சிறிய மினுமினுக்கும் கற்களாக மாற்றின. இதன் காரணமாகவே கிளாஸ் பீச் உருவானது.
கிளாஸ் பீச் தற்போது மேக்கெர்ரிச்சர் மாநிலப் பூங்காவின் (MacKerricher State Park) ஒரு பகுதியாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த கடற்கரை வழக்கமான வெள்ளை மணலால் அல்லாமல் பச்சை, பழுப்பு மற்றும் தெளிவான நிறங்களில் காணப்படும் வண்ணமயமான கற்களால் நிரம்பியுள்ளது.
பல தசாப்தங்களாக கடல் அலைகளின் இயற்கை உராய்வால் உருவான இக்கற்கள் கடற்கரைக்கு தனித்துவமான அழகை அளிக்கின்றன. அருகிலுள்ள சர்வதேச கடல் கண்ணாடி அருங்காட்சியகம் (International Sea Glass Museum) கடல் கண்ணாடியின் கலை மற்றும் வரலாற்றை வெளிப்படுத்துகிறது. இது கடற்கரையின் மினுமினுக்கும் தோற்றத்தைத் தாண்டி அதன் கவர்ச்சியை மேலும் உயர்த்துகிறது. மேலும், இங்குள்ள கண்ணாடி துண்டுகளை சுற்றுலாப் பயணிகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



