குவாந்தான்-ஜொகூர் பாரு சாலையில் விபத்து! இருவர் மரணம்
- Shan Siva
- 09 Sep, 2026
ரொம்பின், செப் 9: நேற்று குவாந்தான்-ஜொகூர் பாரு சாலையில் (Jalan Kuantan-Johor Baru) 134-வது கிலோமீட்டர் பகுதியில், தாங்கள் பயணித்த கார் மரம் ஒன்றின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர்; மற்றொருவர் காயமடைந்தார்.
மாலை 7.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், புரோட்டான் ஈஸ்வரா (Proton Iswara) காரின் ஓட்டுநரான ஆர். விஜய் (27 வயது) ரொம்பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேவேளையில், காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பி. விஜயன் (17 வயது) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரொம்பினிலிருந்து குவாந்தான் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் விஜய் வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று மாவட்டக் காவல் தலைவர் ஷரிஃப் ஷாய் ஷரிஃப் மொண்டோய் தெரிவித்தார்.
கார் சாலையின் இடதுபுறம் இருந்த மரம் ஒன்றின் மீது மோதியது. இதில் விஜயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; அவரது மாமாவான விஜய் ரோம்பின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன் இருக்கையில் அமர்ந்திருந்த 16 வயதுடைய பயணிக்குச் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. இவர்கள் மூவரும் கார் கழுவும் நிலையத்தில் (car wash) பணிபுரிபவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
அஜாக்கிரதையான அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-ன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக ஷரிஃப் ஷாய் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

