பிரிமாஸ் சங்கத் தேர்தலில் சின்னையா அழகன் வெற்றி!
- Surendran Sumdraraj
- 26 Nov, 2026
சுபாங், நவ. 26-
மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான பிரிமாஸ் (PRIMAS) அமைப்பின் 26ஆவது ஆண்டு பொதுக்கூட்டமும் தேர்தலும் நவம்பர் 25ஆம் தேதி சுபாங் ஜெயாவில் உள்ள டோர்செட் கிராண்ட் சுபாங் ஹோட்டலில் நடைபெற்றது.
தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சின்னையா அழகன் 89 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி. கிருஷ்ணன் 74 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 15 வாக்குகள் வித்தியாசத்தில் சின்னையா அழகன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு ஆதரவளித்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
தொழிலாளர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே தமது முதல் முன்னுரிமை என்றும், உறுப்பினர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அவர்களின் நலனைப் பாதுகாப்பதே தமது முக்கியக் கடமை என்றும் உறுதியளித்தார்.
மேலும், சங்கத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தி அனைவரையும் ஒன்றிணைத்துச் செயல்படப்போவதாகவும், சங்கத்தைவிட்டு விலகியவர்களையும் மீண்டும் இணைத்து புதிய கட்டமைப்புடன் சங்கத்தை வழிநடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.
மூத்த முன்னோடிகளின் ஆலோசனைகளைப் பெற்று சங்கத்தின் வளர்ச்சிக்காகச் செயல்படப்போவதாகக் குறிப்பிட்ட அவர், தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான ஆதரவை வழங்குமாறு டத்தோ ரமணன் YB-யிடமும் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, தமக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

