இராமாயண தொடர்ச்சி
- Surendran Sumdraraj
- 02 Oct, 2026
கிஷயந்த காண்டம் பாகம் 2
காட்டில் வாழுகின்ற கொடிய மிருகங்களான சிங்கங்களும், வேங்கைகளும் கூடத் தத்தமது கன்றுகளைக் கண்டது போல இவ்விருவரையும் நெகிழ்ந்து நோக்குவது ஏன் என்று சித்தித்தான் அனுமன். மணி நிறத்து இந்த இருவர் மீதும் வெயில் பட்டு வருத்துமே என்று எண்ணி மயில்கள் தம் தோகைகளை விரித்து இவர்கள் மீது வெயில் படாதவாறு குடை பிடித்தது போல அவர்களுக்கு மேலாக பறந்து வருகின்றன. கருத்த மேகக் கூட்டங்கள், சிறு மழைத் துளிகளை இவர்கள் மீது மெல்லத் தெளித்த வண்ணம் தாழ்ந்து தவழ்ந்து வருகின்றன. காட்டில் நிறைந்து கிடக்கும் சிறு கற்கள் எல்லாம் இவர்களது பாதங்களைக் குத்தாமல் மலர்களைப் போல மிருதுவாக அழுந்துகின்றன. செல்லுகின்ற பாதைகளில் எல்லாம் மரங்களும், செடிகளும் தங்கள் தலை சாய்த்து வணங்கி இவர்களை வரவேற்பது போல காட்சியளிக்கின்றன. எனவே, இவர்கள் தர்மமே மனித உருக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று அனுமன் நினைக்கிறான். பண்டைய பாவங்களையெல்லாம் போக்கி, வினைகளை அறுத்து, தென் திசையிலுள்ள எமலோகம் செல்லாமல் மோட்ச உலகத்திற்குச் செலுத்துகின்ற தேவர்கள் இவர்கள். இவர்களைக் கண்டதும் என் எலும்புகள் ஏன் உருகுகின்றன? மனதில் ஏன் அன்பு இப்படி மேலிடுகிறது? எதனால் இப்படியெல்லாம் நடக்கிறது என்று மனத்தில் எண்ணினான் அனுமன்.
நன்னெறிப்படியே நடக்கின்ற அஞ்சனை புதல்வன் இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டு நின்ற இடத்திற்கு, இராமனும் இலக்குவனும் வந்து சேர்கிறார்கள். அனுமன் அவர்களுக்கு எதிராகப் போய் நின்று கொண்டு வணங்கி, அவர்களிடம் "தங்கள் வரவு துன்பம் இல்லாத வரவாக இருக்கட்டும்! வாருங்கள்" என்று இன்மொழி பகர்ந்தான்.
தன் எதிரே வந்து நின்று மிகவும் பணிவாக இன்சொல் பேசித் தன்னை வரவேற்கும் இவனை இராமபிரான் "நீ எங்கிருந்து வருகிறாய்? நீ யார்?" என்று கேட்கிறார். அதற்கு அனுமன் கூறுகிறான்:
இராமபிரானைப் புகழ்ந்து அழைத்து, "ஐயனே நான் வாயு குமாரன். அஞ்சனா தேவியின் மகனாகப் பிறந்தேன். என் பெயர் அனுமன் என்பதாகும்" என்றான்.
"இந்த ருசியமுக பர்வதத்தின்கண் மறைந்து வாழுகின்ற செங்கதிர் பரிதிச் செல்வன் செம்மல் சுக்ரீவனிடம் பணிபுரிந்து வாழ்பவன். தேவ! நும் வரவைக் கண்டு எம் மன்னன் சுக்ரீவன் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறான். நீங்கள் யாவர் என அறிந்து வரும்படி எனக்குக் கட்டளையிட்டான், ஆதலால் நான் இங்கு வந்தேன்" என்று சொன்னான் பணிவாக.
இப்படிப் பணிவாகவும், பண்போடும், அடக்கமாகவும் பேசுகின்ற அனுமனைப் பார்த்த இராமன்: அனுமனின் தோற்றம், பண்பு, பேசும் முறை இவற்றால் கவரப்பட்ட இராமன் கல்வி, கேள்வி, ஞானம் இவற்றில் இவனுக்கு இணையானவர் உலகில் எவரும் இல்லை என்று மனதில் எண்ணிக் கொண்டு, தன் தம்பி இலக்குவனை அழைத்துச் சொல்லுகிறான்.தம்பி! இவன் வேதக் கடல் எனும்படியாக ஒளி நிறைந்து காணப்படுகிறான். இவன் ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் பேசும் சிற்சில சொற்களிலேயே இவன் மேன்மை வெளிப்படுகிறதே. யாரப்பா இந்த 'சொல்லின் செல்வன்'? பிரம்ம தேவனோ அல்லது சிவபெருமானோ? இங்கு தேவர்கள் மூவரில் பிரம்மனையும், சிவனையும் மட்டும் சொல்லிக் கேட்பது, காத்தல் கடவுளாம் திருமால், தான் என்பதால் இராமன் இவ்வாறு கேட்கிறானோ?
"லக்ஷ்மணா! இவன் ஒரு பிரம்மச்சாரி வடிவத்தில் மாணாக்கனாகத் தோன்றுகிறான் அல்லவா? இது இவனது உண்மைத் தோற்றம் இல்லை. இவன் இந்த உலகுக்கே ஓர் அச்சாணி போன்றவன். இவன் பெருமைகளை எல்லாம் நான் உணர்ந்து கொண்டேன். நீயும் அவைகளைப் புரிந்து கொள்வாய்" என்றான் இராமன்.
பிறகு இராமன், அனுமனை நோக்கி "நீ சொன்ன கவிக்குலத்து அரசன் சுக்ரீவன் எந்த இடத்தில் இருக்கிறான். அவனைப் பார்ப்பதற்காகத்தான், நாங்கள் வந்திருக்கிறோம். அவன் இருக்குமிடத்திற்கு எங்களை அழைத்துச் செல்!" என்றான்.
அதற்கு அனுமன் "உயர்ந்த தோள்வீர! நுமக்கு நிகரான புனிதர் யாரே இவ்வுலகில் உளர்! எம் அரசன் சுக்ரீவனைக் காண விரும்புகிறீர்கள் என்றால், அது அவனது தவப் பயனன்றோ! வீரர்களே! சூரியனுடைய குமாரனான சுக்ரீவனை இந்திரனின் குமாரனான வாலி பகைகொண்டு துன்புறுத்தி துரத்தி விட்டான். சுக்ரீவன் உயிருக்கு பயந்து கொண்டு இந்த ருசியமுகப் பர்வதத்தில் எங்களோடு ஒளிந்து வாழ்கிறான். அவனுக்கு பெருஞ்செல்வம் கிடைத்தது போலத் தாங்கள் அவனிடம் வந்திருக்கிறீர்கள். உலகத்தில் செய்கின்ற அறங்கள் யாவினும் துயரத்தால் அஞ்சி நடுக்கமுற்றவர்களுக்கு அபயம் அளித்துக் காப்பாற்றுவது போன்ற சிறந்த அறம் வேறு ஏதும் உளதோ?. மும்மை உலகங்களையும் படைத்துக் காக்கும் முதல்வராகிய தாங்கள்தான், எங்களை உய்விக்க வந்த தலைவராவீர்! உங்களை சரண் என்று நாங்கள் அடைந்தோம். உங்கள் அருளன்றி வேறு எதுவும் எங்களுக்கு நன்மை பயக்கக்கூடியது இல்லை. ஐயா! என் அரசன் சுக்ரீவனிடம் சென்று வந்திருக்கும் நீவீர் யாவர் என்று சொல்லுவது என்று எனக்குக் கட்டளையிடுங்கள்" என்றான், உண்மைக்கும் சத்தியத்துக்கும் வேலி போன்றவனான அனுமன்.
தங்களை யார் வந்திருப்பது என்று எம் மன்னனிடம் சொல்லுவது என்று அனுமன் கேட்கவும், இளைய வீரன் இலக்குவன் தங்களைப் பற்றி நடந்த வரலாறுகளை எடுத்துக் கூற ஆரம்பித்தான். இந்தப் பாடலில் 'மெய்மையின் வேலி போல்வான்' என்ற அடைமொழியை அனுமனுக்கும், இலக்குவனுக்கும், இருவருக்குமே பொருந்துமாறு கம்பர் பெருமான் அமைத்திருப்பது படித்து மகிழக்கூடிய பகுதி.
"சூரிய குலத்தில் தோன்றி மிகப் பெருமையோடு இந்த உலகத்தை ஆண்டு வந்த பெருமையுடையவனும், தேவர்களின் பொருட்டு சம்பரன் எனும் அசுரனோடு போரிட்டு போரில் அவனைக் கொன்ற புகழையுடையவனும், க்ஷத்திரியர்களுக்கே உரிய பற்பல யாகங்களைச் செய்து முடித்தவனும், கார்மேகம் போல உயிர்களின்பால் கருணையுள்ளவனுமான அயோத்தி மன்னன் தசரத சக்கரவர்த்தியின் கட்டளையின்படி, தசரத குமாரனாகிய இந்த ஆண்தகை இராமன் தனக்கு உரிமையுள்ள ராஜ்ஜியத்தைத் தன் தம்பியான பரதனுக்கு பெருந்தன்மையோடு கொடுத்து விட்டு கானகம் வந்துள்ளான். இந்த வில்வீரனான இராமனுக்கு ஏவல் செய்யும் அடியவன் நான்" என்று தங்களை அறிமுகம் செய்துகொள்கிறான் இலக்குவன்.
இவ்வண்ணம் இராமன் திருஅவதாரம் தொடங்கி, இராவணன் இழைத்த புன்தொழில் ஈறாக அனைத்தையும் ஒன்று விடாமல் அனுமனிடம் சொல்லுகிறான் இலக்குவன். அந்த வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அனுமன், மனம் மகிழ்ந்து, கண்களில் நீர் சோர, அன்பின் மிகுதியால் நெடுஞ்சாண் கிடையாக அவர்கள் காலில் விழுந்து வணங்குகிறான். இப்படி ஒரு மாணவ பிரம்மச்சாரி வடிவம் தாங்கிய அனுமன் தன் பாதங்களில் விழுந்து பணிந்ததும், இராமன் சொல்கிறான்:
"கேள்வி நூல் மறை வலாளா! நீ தகாதன செய்கிறாய். இது தர்மம் ஆகாது. உன் பிரம்மச்சரிய ஆசிரமத்துக்கு ஏற்புடைய செயல் அல்ல இது" என்றான்.
இராமன் இங்ஙனம் சொல்லக் கேட்ட தடந்தோள் வெற்றிவீரனான மாருதி சொல்லுகிறான்: "செந்தாமரைக் கண்ணாய்! நான் அரிக்குலமாம் வானர குலத்தவன் ஆவேன். எனவே நான் செய்த செயல் பிழையன்று". இப்படிக் கூறிவிட்டு நான் இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிற இந்த பிரம்மச்சாரி உருவம் எனக்கு உரியதல்ல, என் உண்மை உருவத்தை இப்போது தங்களுக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே: இந்தப் பூவுலகில் தர்மம் தனியாக இருக்கக்கூடாது அதற்கு துணையாக ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக வந்தவன் இந்த அனுமன் எனும்படி, வேதங்கள் எல்லாம் ஓர் உருக்கொண்டு, பொன் மயமான தேஜசுடன், பெரிய தோள்கள் பூரிக்க தன் சுய உருவைக் காட்டி வானுயர நின்றான். . உலகம் மூன்றையும் தன் காலடிகளால் அளந்த புண்டரீக ஆழிப் புரவலனான, தாமரை இதழ் போன்ற கண்களும், சக்கராயுதத்தையும் கொண்ட திருமாலான இராமபிரானால்கூட அப்படி விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அனுமனின் குண்டலங்கள் ஒளிவீசும் முகத்தைக் காண முடியவில்லை என்றால், சூரிய பகவானிடம் கல்வி கற்ற அந்த அனுமனின் பெருமையை ஒருவரால் எடுத்துக் கூறல் ஆகுமோ?
இராமபிரான் தம்பி இலக்குவனை அழைத்து, "தம்பி! இந்த அனுமன் சாதாரணமானவன் அல்ல அப்பா! பிரளய காலத்திலும் அழிவுறாத வேதங்களும், பிரபோத ஞான நிலையுமே இப்படியொரு குரங்கு வடிவம் எடுத்து நம்முன் வந்து நிற்கிறது. தம்பி! இவன் வரவால் நமக்கு நல்ல நிமித்தம் உண்டாகியிருக்கிறது. இனி நமக்குத் துன்பங்கள் இல்லை இன்பமே நிலைபெற்றிருக்கும். இப்பேற்பட்ட அனுமன் சுக்ரீவனிடம் ஏவல் செய்பவன் என்றால், அந்த சுக்ரீவனது பெருமை எப்படி இருக்குமென்று சொல்லவும் வேண்டுமோ?"
அப்போது தனக்கு எதிரே மனமகிழ்வோடு நிற்கும் இராமபிரானிடம் அனுமன் "நான் விரைந்து சென்று சுக்ரீவனை அழைத்து வருகிறேன். சற்று இங்கே காத்திருங்கள்" என்று சொல்லிவிட்டு, அவன் இருக்குமிடம் நோக்கி விரைந்து சென்றான்.
இராமனிடம் விடைபெற்றுக் கொண்டு சுக்ரீவனிடம் செய்தி சொல்லுவதற்காக விரைந்த அனுமன், சுக்ரீவன் இருக்குமிடம் சென்று வணங்கி "அடியேனும், வானர குலமும், இந்த உலகமும் ஈடேறினோம்" என்று சொல்லிக் கொண்டே, அவன் முன் போய் நின்றான். மகிழ்ச்சி மேலீட்டால் அனுமன், சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடியது போல ஆடினான். (இங்கும் அனுமனை சிவபெருமானுக்கு உவமையாகக் கூறுகிறார் கம்பர்). "வாலியின் உயிரை போக்கிட ஓர் காலன் வந்து விட்டான். நாமெல்லாம் துன்பம் எனும் கடலைத் தாண்டிவிட்டோம்" என்றான். பிறகு வந்திருக்கும் இராம, இலக்குவர் பற்றிய முழு விவரங்களையும் சுக்ரீவனிடம் உணர்ச்சி வயப்பட்டு உரைத்தான்.
"அவர்கள் புவி, வான், பாதலம், அவற்றின் வேறான பிற இடங்கள், திசைகள், இங்கெல்லாம் உறைபவர்களுக்கு உயிரளிக்கும் அமுதம் போல உதவுபவர்கள் என்று புகழ்ந்துரைத்தபின், அவர்களது குலச் சிறப்பு, உள்ளழகு, புறவழகு, இவற்றை விளக்கிச் சொல்லி அவர்களால் சுக்ரீவன் அடையப் போகும் நன்மைகளையும் எடுத்துக் கூறினான். இராமன் தாடகையை வதம் செய்ததையும், அவனது கால் துகள் பட்டு அகலிகை சாபம் நீங்கி உயிர்பெற்று எழுந்ததையும் எடுத்துரைத்தான். மிதிலைக்குச் சென்று சிவபிரானின் திரியம்பகம் எனும் வில்லை ஒடித்ததையும், மிதிலைச் செல்வி ஜனக குமாரி ஜானகியைத் திருமணம் செய்து கொண்டதையும் எடுத்துரைத்தான். தாய் கைகேயி வரம் கேட்க, தந்தை அதனைக் கொடுக்க, அதன்படி தனக்கு உரிமையான் ராஜ்ஜியத்தைத் தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு, கானகம் வந்த செய்தியையும் எடுத்துச் சொன்னான்.
பரசுராமனை கர்வ பங்கம் செய்ததையும், விராடன் எனும் அரக்கனை வீழ்த்தியதையும் விவரமாகச் சொன்னான். காட்டில் கரன் முதலான பதினான்காயிரம் அரக்கர்களைக் கொன்றதையும் எடுத்துச் சொன்னான்.
லட்சுமி சுப்பிரமணியம்
பாகம் 3 அடுத்த வாரம் தொடரும்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

