திரைக்கதை மன்னன், நடிகர் பாக்யராஜ் காலமானார்!
- Shan Siva
- 27 Jun, 2026
சென்னை, ஜூன் 27: தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1953 ஜனவரி 7-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு', 'இன்று போய் நாளை வா', 'சின்ன வீடு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்' உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி நடித்த அவர், குடும்பக் கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதைகளால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார்.
அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தனது குருநாதர் பாரதிராஜாவின் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியை தொடங்கியவர் பாக்யராஜ். பின்னர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிகையாளர் என பல அவதாரங்களை எடுத்து அனைத்திலும் வெற்றியும் கண்டவர்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாக்யராஜை ஹீரோவாக வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியதும் பாரதிராஜா தான்.
1977-ம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே திரைப்படத்தை அடுத்து, கிழக்கே போகும் இரயில் மற்றும் சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களிலும் பாக்யராஜ் உதவி இயக்குநராக பணியாற்றினார். இதுதவிர சிறுசிறு வேடங்களிலும் பாக்யராஜ் நடித்தார். இதன் தொடர்ச்சியாக 1979-ம் ஆண்டு புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அதே ஆண்டில் பாக்யராஜ் சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
1977-ம் ஆண்டு உதவி இயக்குநராகி அடுத்த இரண்டே ஆண்டுகளில் நடிகர், இயக்குநர் என தனது சினிமா பயணத்தில் விரைவாக முன்னேறினார் பாக்யராஜ். தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆளுமையாக பல ஆண்டுகள் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் பாக்யராஜ்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



