அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் மையங்களை விரிவுபடுத்த வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 05 Oct, 2026
சென்னை, அக். 5 –
தமிழகத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் மையங்களின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம், இந்தியாவில் சிறுநீரக நோய் மற்றும் செயலிழப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஐந்தாவது இடத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தேசிய அளவில் சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு 3.20 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் இது 4.30 சதவீதமாக இருப்பதாக ஆய்வுகளை மேற்கோள் காட்டி அவர் கூறியுள்ளார்.
தற்போது 146 அரசு மருத்துவமனைகளில் 1,395 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும், 2025-26ஆம் ஆண்டில் 9,471 பேர் மட்டுமே இச்சேவையைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அன்புமணி குறிப்பிட்டார். தனியார் மருத்துவமனைகளில் ஒரு டயாலிசிஸ் அமர்வுக்கு ரூ.2,000 வரை செலவாகுவதால், நோயாளிகளின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை பொருளாதாரச் சுமை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் வட்ட மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் டயாலிசிஸ் வசதிகளை விரிவுபடுத்துவதுடன், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த சேவையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

