சனி கிரகத்தின் தென் துருவத்தில் 10 பக்கங்களை கொண்ட அலை வடிவம் கண்டுபிடிப்பு
- Surendran Sumdraraj
- 04 Sep, 2026
வாஷிங்டன், செப். 4 –
சூரிய குடும்பத்தின் 6-ஆவது கிரகமான சனி கிரகத்தின் தென் துருவத்தில் 10 பக்கங்களைக் கொண்ட அபூர்வ அலை வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள சனி, அதன் அழகிய வளையங்களால் பிரபலமானது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில், சனி கிரகம் அதற்காக சுமார் 29 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.
1980-களில் நாசா அனுப்பிய ‘வாயேஜர்-1’ மற்றும் ‘வாயேஜர்-2’ விண்கலங்கள் எடுத்த படங்களில், சனி கிரகத்தின் வட துருவத்தில் 6 பக்கங்களைக் கொண்ட அறுகோண அலை வடிவம் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் சமீபத்தில் எடுக்கப்பட்ட படங்களில், சனி கிரகத்தின் தென் துருவத்திலும் புதிய அலை வடிவம் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த அலை வடிவம் 10 பக்கங்களைக் கொண்டதாகவும், அதன் ஒரு பக்கத்தின் நீளம் மட்டும் சுமார் 16,700 கிலோமீட்டர் வரை உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



