பள்ளி மாணவி தற்கொலை - விசாரணையை விரிவுபடுத்த கல்வி அமைச்சர் வலியுறுத்து
- Surendran Sumdraraj
- 21 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 21:
பள்ளியில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் குறித்த விசாரணையை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளியில் துன்புறுத்தல் மற்றும் இனரீதியான ஏளனங்கள் உள்ளிட்ட பொது அக்கறைக்குரிய விஷயங்கள் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பயின்ற மாணவியின் இழப்பைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கும் பள்ளி சமூகத்திற்கும் தனது அனுதாபங்களை அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் முழுமையாகக் கையாளப்படுவதை உறுதிசெய்ய, கல்வி அமைச்சகம் காவல்துறையுடன் ஒத்துழைப்பதுடன், சமூக நலத்துறை மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.
அந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு அமைச்சகத்தின் ஆலோசனை குழுவால் உளவியல் சமூக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது என்று ஃபத்லினா கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உளவியல் சமூக ஆதரவையும் நெருக்கடி காலத் தலையீட்டையும் வழங்குவதற்காக அமைச்சகத்தின் ஸ்மார்ட் ஆதரவுக் குழுவும் களமிறக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதும், எந்தவிதமான கொடுமைப்படுத்துதல் மற்றும் பாகுபாடு இல்லாத பாதுகாப்பான கல்விச் சூழலைப் பேணுவதற்குத் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதும் தங்களின் முன்னுரிமை என்று அவர் கூறினார்.
கெசியா நிஷா என அடையாளம் காணப்பட்ட 14 வயது சிறுமியின் மரணம், PKR இளைஞர் பிரிவுத் தலைவர் காமில் முனிம் உட்படப் பல தரப்பிலிருந்தும் விசாரணைக்கான கோரிக்கைகளைத் தூண்டியது.
மலேசிய சமூகத்தில் நிலவும் இனவெறி குறித்தான் இந்தச் சம்பவம் பரந்த சிந்தனையைத் தூண்ட வேண்டும் என்று காமில் கூறினார்.
அந்தச் சிறுமியின் மரணத்திற்குப் பல மாதங்களுக்கு முன்பே, அவரது குடும்பத்தினர் அரசாங்கத்தின் பொதுப் புகார்கள் மேலாண்மை அமைப்பு மூலம் புகார் அளித்திருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக PKR துணைப் பொதுச்செயலாளர் ஜி. சிவமலர் முன்னதாகத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



