மலேசியத் தமிழர்களின் ஒற்றுமை, கலை, கலாச்சாரத்தைப் பறைசாற்றிய TACA தீபாவளி கொண்டாட்டம் 2026 - 6 சாதனையாளர்களுக்கு TACA Icon Awards – 100 பேருக்கு இலவச காப்பீட்டு அட்டைகள்!
- Shan Siva
- 21 Nov, 2026
கோலாலம்பூர், நவம்பர் 21: மலேசியாவில் வாழும் தமிழர்களின் மொழி, கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையைப் பேணிப் பாதுகாத்து, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே உறவுப் பாலமாகச் செயல்படும் தமிழ் கலை கலாச்சார சங்கம் (TACA – Tamil Arts and Cultural Association) சார்பில், TACA Deepavali Kondattam 2026 விழா நேற்று நவம்பர் 20-ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள டான் ஸ்ரீ சோமா அரங்கில் மிக விமரிசையாக நடைபெற்றது.
300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், மலேசியாவில் வாழும் இந்தியத் தமிழர்கள், குடும்பங்கள், குழந்தைகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆளுமைகள் ஒன்றிணைந்து தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து மலேசியாவில் வாழும் தமிழர்களும், அவர்களது குழந்தைகளும் பெருமளவில் பங்கேற்றது விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது.
தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக TACA
TACA தலைவர் டாக்டர் ஆர்.வி. ஷ்யாம் பிரசாத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மலேசியாவில் வாழும் தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், தமிழர்களின் மொழி, பாரம்பரியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் TACA தொடர்ந்து செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்திய வம்சாவளித் தமிழர்கள் மலேசியாவில் தொழில், மருத்துவம், கல்வி, வணிகம் மற்றும் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர். அவர்களின் திறமைகளையும் சாதனைகளையும் வெளிக்கொணர்வதோடு, அனைவரையும் ஒரே குடையின் கீழ் இணைத்து, சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதே TACA-வின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில், துணை இயக்குநர் புகழேந்தி வாழ்த்துச் செய்தி அனுப்பி விழாவைச் சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு
இந்த விழாவில் இந்தியத் தூதரகத்தின் பிரதிநிதி பிரதீஷ் குமார் மற்றும் OMS குழும நிறுவனங்களின் நிறுவனரும், ஓம்ஸ் அறவாரியத் தலைவருமான OMS. பா.தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மேலும், நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் துணை சபாநாயகர் டத்தோ ரவி, ராஜி சில்க் பேலஸ் நிறுவனத்தின் நிறுவனர் டத்தோ ஹாஜி அலி ஜின்னா, நாராயணா டீ ஸ்டால் நிறுவனர் திருமதி ஷோபனா, கேபிடல் ஹால் குழும நிறுவனங்களின் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹரி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
மலேசிய மலையாளி சங்கம், தெலுங்கு சங்கம் உள்ளிட்ட பல்வேறு இந்திய சமூக அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். துபாயிலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர்களும் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.
கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள்
குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், குழுப் பாடல்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பங்கேற்ற கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.
கலை நிகழ்ச்சிகளை திருமதி லட்சுமி மற்றும் திருமதி கமலா சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.
விழாவில் பங்கேற்றவர்களின் வரவேற்பு, இருக்கை, உணவு மற்றும் இதர ஏற்பாடுகளை TACA துணைத் தலைவர்கள் தஅல்தாஃப் பாஷா, கண்ணன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர்.
வரலாற்றில் முதல் முறையாக TACA Icon Awards
TACA அமைப்பின் வரலாற்றில் முதல் முறையாக, தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு வந்து பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனைகளைப் படைத்து, தங்களது உழைப்பாலும் திறமையாலும் உயர்ந்த நிலையை அடைந்த ஆறு சாதனையாளர்களுக்கு TACA Icon Awards 2026 விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
புலம்பெயர்ந்த தமிழர்களின் சாதனைகளை அங்கீகரித்து, அவர்களை அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரிகளாக அறிமுகப்படுத்தும் வகையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு அமைந்தது.
100 பேருக்கு இலவச காப்பீட்டு அட்டைகள் – தமிழக அரசுக்கு நன்றி
மற்றொரு முக்கிய நிகழ்வாக, மலேசிய NRT அமைப்பின் தலைவர் சார்பில் 100 பேருக்கு இலவச காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.
மேலும், வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அயலகத் தமிழர் விழாவில் பங்கேற்க TACA-விற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளதாக டாக்டர் ஷ்யாம் பிரசாத் தெரிவித்தார்.
தமிழக அரசின் அன்பான ஆதரவிற்கும், 100 பேருக்கு காப்பீட்டு அட்டைகள் வழங்கியதற்கும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் டாக்டர் ஆர்.வி. ஷ்யாம் பிரசாத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
தமிழக அரசுடன் இணைந்து அயலகத் தமிழர்களின் நலனுக்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க TACA தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒற்றுமையில் நெகிழ்கிறேன்!
நிகழ்வில் பேசிய ஓம்ஸ். பா.தியாகராஜன், இந்தியாவிலிருந்து வந்து இங்கு பணிபுரியும் மற்றும் தொழில் செய்து வரும் நம் இந்திய சொந்தங்கள் ஒற்றுமையாக இணைந்து இம்மாதிரி விழாக்களில் ஒன்றுகூடுவது கண்டு தாம் நெகிழ்ச்சியடைவதாகவும், சொந்தங்கள் எல்லாம் ஊரில் இருக்கிறார்கள் என்ற ஏக்கத்தோடு இருக்கும் இவர்களுக்கு, இங்கும் சொந்தங்கள் இருக்கிறார்கள் இந்நிகழ்வு அவர்களுக்கு உணர்த்துவதாகவும் கூறினார்.
மேலும் TACA வுடன் இணைந்து தாமும் தொழில்துறையில் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஓம்ஸ் பா.தியாகராஜன், தமிழ்க் கலை கலாச்சார சங்கத்திற்காக RM 10,000 வழங்குவதாக அறிவித்தார்.
ஒற்றுமையே நமது வலிமை – டாக்டர் ஷ்யாம் பிரசாத்
விழாவில் உரையாற்றிய TACA தலைவர் டாக்டர் ஆர்.வி. ஷ்யாம் பிரசாத்:
“வாழ்க்கையில் பல சவால்களும், எதிர்பாராத சூழ்நிலைகளும் நம்மைச் சந்திக்கலாம். அத்தகைய தருணங்களில் நம்பிக்கையை இழக்காமல், ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், ஒற்றுமையாகவும் நிற்பதே நமது மிகப்பெரிய வலிமை. கடலலைகளில் தத்தளிக்கும் ஒரு சிறிய துரும்புக்கு நங்கூரம் எவ்வாறு அடைக்கலமாக இருக்கிறதோ, அதுபோல நம்பிக்கையையும் ஒற்றுமையையும் நாம் ஒருவருக்கொருவர் வழங்க வேண்டும். மலேசியாவில் வாழும் தமிழர்கள் அனைவரும் நம்பிக்கை நட்சத்திரங்களாக, ஒற்றுமையுடன் செயல்பட்டு, நமது சமூகத்தை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.
சிறப்பான ஒருங்கிணைப்பும் நன்றியுரையும்
நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை TACA துணைத் தலைவர் ஹரிஹரசுதன் மற்றும் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ரூபன் ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர். TACA ஆலோசகர் த ஜான் ரீகன் நிகழ்ச்சியின் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றினார்.
செயலாளர் வினோத் மற்றும் பொருளாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரும், தன்னார்வலர்களும் நிகழ்ச்சி வெற்றியடைய தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் துணைத் தலைவர் ஹரிஹரசுதன் நன்றியுரை வழங்கினார்.
தமிழர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் சமூகப் பங்களிப்பை ஒரே மேடையில் கொண்டாடிய TACA தீபாவளி கொண்டாட்டம் 2026, மலேசியத் தமிழர்களின் ஒற்றுமையையும் உறவையும் மேலும் வலுப்படுத்திய ஒரு மறக்க முடியாத விழாவாக இனிதே நிறைவுற்றது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

