Delivery Boy-ஆக மாறிய மலாக்கா முதல்வர்! மோட்டார் சைக்கிளில் வீடு வீடாகச் சென்று உணவு விநியோகம்
- Shan Siva
- 02 Sep, 2026
மஸ்ஜித் தானா, செப் 2: மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ, டெலிவெரி ஊழியர்களாகப் பணிபுரிபவர்களின் அன்றாட வழக்கத்தை நேரடியாக அனுபவிப்பதற்காக, ஒரு பி-ஹெய்லிங் விநியோகஸ்தராக மாறி, உணவு ஆர்டர்களைப் பெற்று வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு அவற்றை நேற்று விநியோகம் செய்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.
பல்வேறு டிஜிட்டல் தளங்கள் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டும் பி-ஹெய்லிங் விநியோகஸ்தர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அவர் நன்கு புரிந்துகொள்ள இந்த அனுபவம் உதவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் குடும்பங்களை ஆதரிப்பதற்காக ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கும் விநியோகஸ்தர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும், அவர்கள் எவ்வாறு ஆர்டர்களைப் பெறுகிறார்கள், உணவைச் சேகரிக்கிறார்கள் மற்றும் விநியோகம் செய்கிறார்கள் என்பதைத் தாமே நேரில் காண விரும்பியராகவும் ரவுஃப் கூறினார்.
நான் டெலிவரி ரைடர்களில் ஒருவராக ஆகி, அவர்கள் எப்படி ஆர்டர்களைப் பெறுகிறார்கள் என்பதைக் கற்றுக்கொள்ள முயன்றேன். அதன்பிறகு, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு உணவை டெலிவரி செய்ய முயற்சித்தேன் என்று தெரிவித்தார்.
வீட்டில் உள்ள தங்கள் குடும்பங்களை ஆதரிப்பதற்காக அவர்கள் ஈட்டும் வருமானத்தை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன் என்று நேற்று மஸ்ஜித் தானா சென்ட்ரலில் பி-ஹெய்லிங் ரைடர்களுடன் கலந்துரையாடிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.
ஆன்லைன் டெலிவரி சேவைகள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பி-ஹெய்லிங் ரைடர்களும் பங்களிப்பதால், அவர்களின் பங்கிற்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தொழில்நுட்பம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வணிக மற்றும் பொருளாதார நடைமுறைகளையும் மாற்றியமைத்துள்ளன என்றும், இது பி-ஹெய்லிங் ரைடர்களின் பங்கை மேலும் முக்கியமானதாக ஆக்குகிறது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், உருவாக்கப்பட்டு வரும் உதவித் திட்டத்தின் மூலம் மலாக்காவில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட பி-ஹெய்லிங் ரைடர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரவுஃப் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



