மலாக்கா தேர்தலில் அமோக வெற்றி – ஆட்சியைத் தக்கவைத்தது தேசிய முன்னணி
- Shan Siva
- 15 Nov, 2026
கோலாலம்பூர், நவ 15: மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி 21 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் 3 இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், பக்காத்தான் ஹராப்பான் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணியும் பெரிக்காத்தான் நேஷனலும் இணைந்து 24 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இதன் மூலம் சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இந்தக் கூட்டணி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 15 இடங்களைத் தேசிய முன்னணி தனித்தே பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்தத் தேர்தலில் 4 லட்சத்து 93 ஆயிரத்து 573 பேர் வாக்களித்துள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 71.77 விழுக்காடாகும். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற கடந்த தேர்தலில் தேசிய முன்னணி 21 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. இந்த முறையும் அதே எண்ணிக்கையிலான இடங்களைத் தக்கவைத்துள்ளது.
அதே நேரத்தில் மசீச இரண்டு இடங்களிலும், மஇகா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பாஸ் கட்சி மூன்று இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பக்காத்தான் ஹராப்பான் சார்பில் டிஏபி வெற்றி பெற்ற நான்கு தொகுதிகளும் ஆயர் கெரோ, கெசிடாங், பண்டார் ஹிலிர், கோத்தா லக்சாமானா ஆகிய நகர்ப்புறத் தொகுதிகளாகும்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 79 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பக்காத்தான் ஹராப்பான் 24 தொகுதிகளிலும், தேசிய முன்னணி 23 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.
தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போதைய முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ மீண்டும் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று அம்னோ தலைவரும் தேசிய முன்னணித் தலைவருமான அஹமட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
தஞ்சோங் பிடாரா தொகுதியில் போட்டியிட்ட அப்துல் ரவூப் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் 24 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021 தேர்தலில் பெற்ற நான்கு இடங்களையே இம்முறையும் தக்கவைத்துள்ளது.
குறிப்பாக, அமனா கட்சியின் முக்கியத் தலைவரும் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய துணைப் பாதுகாப்பு அமைச்சருமான அட்லி ஜஹாரி, புக்கிட் கட்டில் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். அந்தத் தொகுதியை பாஸ் கட்சியின் வேட்பாளர் ரிட்ஸ்வான் சாரிப் கைப்பற்றியுள்ளார்.
மலாக்கா பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அட்லி ஜஹாரி, தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தல் மலாக்கா மாநில ஆட்சியைத் தீர்மானிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் தேசிய அரசியலிலும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் கருதப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

