சிறந்த இசையமைப்பாளர் சூர்யா - உதயநிதி கொடுத்த விருது!

top-news
FREE WEBSITE AD

சிறந்த நடிகருக்கான விருதை பெற மேடை ஏறிய சூர்யாவுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கொடுக்கப்பட வேண்டிய சிறந்த இசையமைப்பாளர் விருதை உதயநிதி ஸ்டாலின் கொடுத்தது வைரலாக மாறியுள்ளது.

2016 முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் விழா பிப்ரவரி 13, 2026 அன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆண்டுகளில் வழங்கப்படாமல் இருந்த சுமார் ஏழு ஆண்டுகளுக்கான விருதுகள் ஒரே நேரத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்டதால், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, 2016 முதல் 2022 வரையிலான திரைப்பட விருதுகள் மட்டுமின்றி, 2014 முதல் 2022 வரையிலான சின்னத்திரை விருதுகள் மற்றும் 2015-16 முதல் 2021-22 வரையிலான மாணவர் விருதுகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சமூகச் சிந்தனைகள், மக்களின் அன்றாட வாழ்க்கை, மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

விழாவில், நடிகர் சூர்யா தனது 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் பெற்றனர். இருவரும் வெவ்வேறு பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், மேடையில் நடந்த ஒரு சிறிய குளறுபடி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

நிகழ்ச்சி மேடையில் முதலில் 'ஜெய் பீம்' திரைப்படத்திற்காக சூர்யாவுக்கு விருது வழங்குவதாக அறிவிப்பாளர் கூறியதும், சூர்யா விருதைப் பெறச் சென்றார். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட விருது, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது என்று பின்னர் தெரியவந்தது.

விருதைப் பார்த்ததும் சூர்யா உடனடியாக, கீழே அமர்ந்திருந்த ஏ.ஆர். ரகுமானிடம் அது அவருக்கான விருது என்பதை தெரிவித்தார். முதலில் குழப்பமடைந்த ரகுமானிடம், சூர்யா மேடையிலிருந்து கீழே வந்து விருதை காண்பித்து விளக்கமளித்தபோது, அங்கு நடந்த தவறு அனைவருக்கும் தெளிவானது. மேடையில் இருந்தவர்களின் கவனக்குறைவால் இந்த பிழை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் சூர்யா, அதிகாரிகளை அணுகி, விருதுகளை முறையாக மாற்றி வழங்க உதவினார். இந்தத் தருணத்தை பதிவு செய்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சூர்யாவின் இந்த செயல் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டு குவிந்துள்ளது.
திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர்களாக விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.மேலும், மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய் பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *