தபோங் ஹாஜி ஊழல் விவகாரம் மேலும் எழுவர் கைது
- Shan Siva
- 16 Aug, 2026
கோலாலம்பூர்: தபோங் ஹாஜி (TH) தொடர்பான ராயல் விசாரணை ஆணையத்தின் (RCI) விசாரணையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், தபபோங் ஹாஜியின் முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரிகள் நால்வர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, நிறுவன இயக்குநர்கள், முன்னாள் நிறுவன இயக்குநர் மற்றும் தபோங் ஹாஜியின் முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரிகள் நால்வர் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 10.30 மணிக்குள் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி தலைமையகத்தில் தனித்தனியாக கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
60 வயதுகளில் உள்ள டத்தோ பட்டம் பெற்ற கப்பல் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி, தபோங் ஹாஜிக்கு பணம் செலுத்தும்போது தவறான தகவல்கள் கொண்ட ஆவணங்களை சமர்ப்பித்ததாக சந்தேகிக்கப்படுகிறார். மேலும், தனது சொந்த நிறுவனத்துக்கு சாதகமாக பெட்ரோலிய நிறுவனத்துடன் தொடர்புடைய ஒப்பந்த ஆவணத்தை போலியாகத் தயாரித்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
60 வயதுகளில் உள்ள மற்ற இருவர் — டத்தோ மற்றும் டத்தோஸ்ரீ பட்டம் பெற்றவர்கள் — கட்டுமான நிறுவனத்தில் தபோங் ஹாஜி முதலீடு செய்ய அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனம் எதிர்காலத்தில் புர்சா மலேசியாவில் பட்டியலிடப்படும் வாய்ப்பு உள்ளது என அவர்கள் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட தபுங் ஹாஜியின் முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரிகள் நால்வர், அவர்களில் டத்தோஸ்ரீ ஒருவரும் ஒரு பெண்ணும் அடங்குவர். சவுதி அரேபியாவில் உள்ள நான்கு ஹோட்டல்களை குத்தகைக்கு எடுப்பதற்காக, ஒரு நிறுவனத்துடன் 2.49 பில்லியன் சவுதி ரியால் — சுமார் RM2.72 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தில் தபோங் ஹாஜி ஈடுபடுவதற்கு வழிவகுத்த ஊழல் நடவடிக்கைகளில் அவர்கள் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தால் தபுங் ஹாஜிக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், கப்பல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் ஆகிய இருவர் மட்டுமே காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எம்ஏசிசி தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் அஹமட் அஃபிக் ஹசான், இருவருக்கும் ஐந்து நாள் தடுப்புக் காவலை, ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை வழங்கினார்.
மற்ற ஐந்து சந்தேக நபர்களும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக எம்ஏசிசி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



