கொலம்பியா: பேருந்தில் குண்டு வெடிப்பு – 13 பேர் பலி
- Surendran Sumdraraj
- 27 Apr, 2026
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பயங்கரமான குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்று, 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் ஏப்ரல் 25 அன்று தென்மேற்கு கொலம்பியாவின் கவ்கா (Cauca) பகுதியில் உள்ள பான்-அமெரிக்க நெடுஞ்சாலையில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த நேரத்தில், சாலையோரத்தில் முன்கூட்டியே பொருத்தப்பட்ட வெடிகுண்டு செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற பயணிகள் பஸ் வெடிப்பில் சிக்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் குறைந்தது 38 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து கொலம்பியா இராணுவத் துறை, இது “பயங்கரவாதத் தாக்குதல்” எனக் குறிப்பிட்டுள்ளது. 2016 அமைதி ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த முன்னாள் FARC கிளர்ச்சி அமைப்பின் பிரிவினரே இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இந்த தாக்குதல் கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் வழிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆயுதக் குழுக்கள் இடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



