அடுத்த வாரம் நிச்சயம்,மோதிரம் தயார்.. அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட இஸ்ரேலிய தூதர்!

- Muthu Kumar
- 23 May, 2025
அமெரிக்காவில் நேற்று இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்ட இஸ்ரேலிய இளம் ஜோடி விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவுக்கான இஸ்ரேலிய தூதர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
யாரோன் லிஷ்சின்ஸ்கி மற்றும் சாரா மில்கிரிம் என அடையாளம் காணப்பட்ட இந்த இருவரும் இஸ்ரேலிய தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள். இஸ்ரேலிய இளம் தொழில்முனைவோர்களுக்கான ஒரு சமூக நிகழ்வில் பங்கேற்க Capital Jewish Museum என்ற பகுதிக்கு வந்திருந்தனர்.
இவர்கள் இருவரும் வாழ்க்கையின் சிறந்த கட்டத்தில் இருந்ததாக தெரிவித்து, இஸ்ரேலிய தூதரகம் பெரும் வருத்தம் தெரிவித்துள்ளது. "யாரோன் மற்றும் சாரா நம் நண்பர்களும் சக ஊழியர்களும். அவர்கள் அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் இன்று, ஒரு பயங்கரவாதி அவர்களை சுட்டுக் கொன்றான்," என தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது ஒரு பயங்கரவாதச் செயல் என தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தூதரக ஊழியர்கள் அனைவரும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உள்ளதாகவும், இந்த கொடூரத் தாக்குதலை வார்த்தைகள் மூலம் விவரிக்க முடியாது எனவும் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தூதரகத்தில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா தொடர்பான புலனாய்வு பிரிவில் யாரோன் லிஷ்சின்ஸ்கி பணியாற்றி வந்துள்ளார். சாரா மில்கிரிம் பொது தூதுவியல் துறையில் பணியாற்றினார். அவர் அமெரிக்க பல்கலைகழகத்தில் சர்வதேச உறவுகள் துறையில் முதுநிலை பட்டம் பெற்றிருந்தார்.இவர்கள் இருவரும் ஜெருசலேம் நகருக்கு அடுத்த வாரம் சென்று நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிட்டிருந்தனர். யாரோன், நேற்று முன் தினம் தான் நிச்சயதார்த்த மோதிரம் வாங்கியிருந்தார் என தூதர் யேக்கியல் லைடர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Capital Jewish Museum என்ற இடத்தில் நிகழ்வு முடிந்து வெளியே வந்த சமயத்தில், அந்த இருவர் மீதும் மர்ம நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்ததாக மெட்ரோபாலிடன் காவல்துறை தலைவர் பாமிலா ஸ்மித் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
தாக்கிய நபர் கைது செய்யப்பட்டபோது “பாலஸ்தீனுக்கு சுதந்திரம்! பாலஸ்தீனுக்கு சுதந்திரம்!” என கூச்சலிட்டதாக சாட்சியங்கள் கூறியுள்ளனர். அவர் தன்னை ஒரு பொதுமகனாக நடித்துக்கொள்ள முயற்சித்தாலும், பாதுகாப்புப் படையினரால் உடனே பிடிக்கப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்டபோதும் நின்றுவிடாமல் பாலஸ்தீன ஆதரவுக் கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *