முக்கிய சாட்சி மருத்துவ விடுப்பு-லிம்மின் ஊழல் வழக்கு ஒத்திவைப்பு!
- Muthu Kumar
- 16 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 16-
பினாங்கின் முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மீதான கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் தொடர்பான லஞ்சஊழல் வழக்கை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது. அரசுத் தரப்பின் பிரதான சாட்சி ஒருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவ விடுப்பில் இருப்பதாகக் கூறப்பட்டதால் அவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வழக்கில் கொன்சோர்ட்டியம் ஸெனித் கொன்ஸ்டிரக்ஷன் செண்டிரியான் பெர்ஹாட்டின் முன்னாள் இயக்குநர் டத்தோ ஸாருல் அமாட் முகமது ஸூல்கிப்ளி (வயது 65) நேற்று சாட்சியமளிக்கவிருந்தார். ஆனால், அரசுத் தரப்பின் 23ஆவது சாட்சியான அவர், காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருப்பதாகவும் அவரின் மருத்துவச் சான்றிதழ் அடுத்த விசாரணையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் துணை அரசு வழக்கறிஞர் மஹாடி அப்துல் ஜூமாட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஏற்கெனவே அட்டவணையிட்டப்படி அடுத்தாண்டு பிப்ரவரி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதிவரை வெவ்வேறு நாட்களில் விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அஸூரா அல்வி குறிப்பிட்டார். அறுபத்து மூன்று வயதான லிம் குவான் எங் பினாங்கின் முதல்வராக இருந்த வேளையில், ஸாருல் அமாட்டின் நிறுவனத்திடமிருந்து 33 லட்சம் வெள்ளியை லஞ்சமாகப் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
ஸாருல் அமாட்டின் நிறுவனத்திற்கு கடலடிச் சுரங்கப் பாதையை நிர்மாணிக்கும் குத்தகையைப்பெற்றுத்தருவதற்கு அந்த கையூட்டை அவர் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்திட்டத்துடன் தொடர்புடைய மேம்பாட்டு நிறுவனத்திற்கு பினாங்கு அரசாங்கத்திற்குச் சொந்தமான இருபது கோடி வெள்ளி மதிப்புடைய இரண்டு துண்டு நிலங்களை விற்றதாகவும் அவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *