சிப்பாங் கார் பந்தயத்தில் புதிய சாதனை: 2.61 லட்சம் ரசிகர்கள் குவிந்தனர்
- Surendran Sumdraraj
- 05 Oct, 2026
சிப்பாங், அக். 5 –
சிப்பாங்கில் நடைபெற்ற கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தப் போட்டியின் வார இறுதி நிகழ்வுகளை மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். இது சிப்பாங் அனைத்துலக கார் பந்தய அரங்கில் வரலாற்றில் பதிவான மிக அதிகமான பார்வையாளர் எண்ணிக்கையாகும்.
போட்டியின் முக்கிய நாளான நேற்று மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரம் ரசிகர்கள் அரங்கில் திரண்டனர். மலேசியாவுக்கு பார்முலா ஒன் போட்டி மீண்டும் திரும்பியதை ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்ற நிலையில், அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிகப்பெரிய வரவேற்பு குறித்து பார்முலா ஒன் அமைப்பின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டெஃபானோ டொமெனிகாலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடைபெற்ற பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸுக்குக் கிடைத்த ரசிகர்களின் ஆதரவு தம்மை மிகவும் உற்சாகப்படுத்தியதாக அவர் கூறினார்.
மேலும், இந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதில் பஹ்ரைன் மன்னர் ஹமத் ஈசா அல் கலீபாவின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். அவரது தொலைநோக்கு, உறுதியான முயற்சி மற்றும் விரைவான முடிவுகள் காரணமாகவே இத்தகைய பெரிய அளவிலான போட்டியை இரண்டு மாதங்களில் வெற்றிகரமாக நடத்த முடிந்ததாக டொமெனிகாலி தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

