19ஆவது தங்கப் பதக்க விழாவில் பட்டதாரிகளின் அனுபவ பகிர்வு

top-news

கோலாலம்பூர், நவ. 24-

மலாயா பல்கலைக்கழகத்தின் கலை, சமூக அறிவியல் புலத்தின் இந்திய ஆய்வியல் துறை ஏற்பாட்டில் நடைபெற்ற 19-ஆவது தங்கப் பதக்க விருது வழங்கும் விழாவில், பதக்கம் வென்ற பட்டதாரிகள் தங்களின் கல்விப் பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள், பெற்றோரின் தியாகங்கள் மற்றும் பேராசிரியர்களின் வழிகாட்டுதலை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சியுடன் உரையாற்றினர்.

வேலைக்கும் கல்விக்கும் இடையே போராட்டம்!

பணியாற்றிக்கொண்டே உயர்கல்வியைத் தொடர்ந்த ஒரு பட்டதாரி, நீண்ட வேலை நேரத்திற்குப் பின்னரும் இரவு 10 மணிக்குமேல் ஆய்வேடு தயாரித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். முனைவர் ரவீந்திரன், டாக்டர் மோகன்தாஸ் மற்றும் டாக்டர் சில்லாழி ஆகியோரின் ஊக்கமே தமது வெற்றிக்குக் காரணம் என்ற அவர் பெற்றோர் மற்றும் பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

தாத்தா வயதிலும் கல்வி ஆர்வம்!

 தந்தை, கணவர், தாத்தா என்ற பொறுப்புகளுடன் மீண்டும் கல்வியைத் தொடர்ந்து தங்கப் பதக்கம் வென்ற அனுபவத்தைப் பகிர்ந்த முனைவர் பட்டதாரி, வயது கல்விக்குத் தடையல்ல என்பதை வலியுறுத்தினார். பேராசிரியர்களின் மரியாதையும் குடும்பத்தினரின் ஆதரவுமே தமது வெற்றிக்குத் துணைநின்றதாகக் குறிப்பிட்டார்.

எட்டு ஆண்டுகாலப் போராட்டத்தில் முனைவர் பட்டம்!

எட்டு ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்துடன் தங்கப் பதக்கமும் பெற்ற பட்டதாரி, படுத்த படுக்கையாக இருக்கும் தாயாரால் தமது வெற்றித் தருணத்தில் நேரில் கலந்துகொள்ள முடியாதது பெரும் ஏக்கத்தை ஏற்படுத்தியதாகக் கண்கலங்கினார். தங்கப் பதக்கங்களை வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கும் ஓம்ஸ் பா. தியாகராஜனை முதலாம் பராந்தகச் சோழனுடன் ஒப்பிட்டுப் பாராட்டினார்.

திருமணப் பரிசாகக் கிடைத்த தங்கப் பதக்கம்!

இந்தியாவின் குன்றக்குடியில் நவம்பர் 11-ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட முதுகலைப் பட்டதாரி, தமக்குக் கிடைத்த தங்கப் பதக்கத்தைத் திருமணப் பரிசாகக் கருதுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆய்வு நெறியாளர், பெற்றோர், கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி கூறினார்.

தாயாரே முதல் ஆசான்!

ஒன்பது வயது முதலே தம்மைப் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று ஊக்கப்படுத்திய விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றிய தாயாரின் உழைப்பை ஒரு மாணவி நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். தந்தையின் மறைவுக்குப் பின்னரும் மன உறுதியுடன் கல்வியில் வெற்றி பெற்றதாகக் கூறிய அவர், இந்திய ஆய்வியல் துறைக்குத் தொடர்ந்து பங்களிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

மறைந்த பெற்றோருக்கு வெற்றியைச் சமர்ப்பணம்!

தமது இரு பெற்றோர்களும் வெற்றியைக் காண உயிருடன் இல்லாதது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட மற்றொரு பட்டதாரி, தமக்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார். திருக்குறளை மேற்கோள் காட்டி இறைநம்பிக்கையுடன் உரையை நிறைவு செய்தார்.

நடமாடும் விக்கிபீடியாவான ஆய்வு நெறியாளர்!

தமது ஆய்வு நெறியாளரை 'நடமாடும் விக்கிபீடியா' எனப் பெருமையுடன் வர்ணித்த மற்றொரு பட்டதாரி, அவரது ஆழமான அறிவும் வழிகாட்டுதலும் ஆய்வுப் பயணத்தை எளிதாக்கியதாகக் குறிப்பிட்டார்.

பட்டதாரிகளின் இத்தகைய பகிர்வுகள், தங்கப் பதக்கம் என்பது கல்விச் சாதனைக்கான அங்கீகாரம் மட்டுமல்ல; பெற்றோரின் தியாகம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, குடும்பத்தின் ஆதரவு மற்றும் தனிமனித விடாமுயற்சியின் அடையாளம் என்பதையும் விழாவில் உணர்த்தின.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்