விஜயை சந்திப்பதில் என்ன சிக்கல்?! -அன்வார் விளக்கம்
- Shan Siva
- 14 Sep, 2026
புது டெல்லி, செப் 14: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயுடனான இருதரப்புச் சந்திப்புக்கான திட்டம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், அது புத்ராஜெயாவிலோ அல்லது தமிழ்நாட்டின் சென்னையிலோ நடைபெறலாம் என்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் உள்ள அன்வார், டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் (BRICS) தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, தென்னிந்திய மாநிலமான கேரளாவுக்குச் செல்வதற்கு முன்னதாக சென்னைக்கு ஒரு பணி நிமித்தமான பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும், கடைசி நேரத்தில் சென்னைக்கான பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, சென்னை தரப்பிலிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என கசிந்த செய்திகளை அன்வார் நிராகரித்தார். முதலமைச்சரின் அலுவலகம் ஆரம்பத்திலிருந்தே அவரது பணி அட்டவணையைச் சரிசெய்ய முயற்சிப்பதாகக் கூறியது; ஏனெனில் அவருக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகள் இருந்தன, அதே சமயம் புது டெல்லி, கேரளா மற்றும் மாலத்தீவு பயணங்களுக்கு இடையே எனக்கு மிகக் குறைந்த நேரமே இருந்தது என அன்வார் தெரிவித்துள்ளார்.
அப்படியிருந்தும், அவர் அதற்கேற்ப நேரம் ஒதுக்க முயன்றார்; அவருக்கு ஒரு முக்கிய முதலீட்டு முயற்சி மற்றும் பிற திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருந்தன. எனவே இறுதியாக அவரிடம், நான் கேரளா மற்றும் மாலத்தீவு பயணங்களைத் தொடர்கிறேன், என்னால் தமிழ்நாடு பயணத்தை மேற்கொள்ள இயலாது என்று கூறினேன் என்று நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், 'தந்தி டிவி'-க்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறினார்.
ஏற்கனவே உள்ள பணிச் சுமைகளுக்கு மத்தியிலும் இரு தரப்பினரும் தங்கள் பயணத் திட்டங்களை ஒருங்கிணைக்க முயன்றதை மீண்டும் வலியுறுத்திய அவர், இரு தரப்புக்கும் இடையிலான நல்லெண்ணம் வலுவாகவே இருப்பதாகவும் கூறினார்.
இளம் வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் ஆரம்பக்கட்ட ஆதரவையும் ஈர்ப்பையும் அன்வார் பாராட்டினார். அதே வேளையில், மதிப்புகள், பொறுமை மற்றும் நடைமுறை ஞானம் ஆகியவற்றின் அடிப்படையில் அதிகாரத்தை அணுகும் நீண்டகாலப் பார்வையை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
விஜயை பகுத்தறிவு கொள்கைகள் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றின் ஒரு புதிய குரல் என்று அவர் வர்ணித்தார்.
சீர்திருத்தங்கள் மற்றும் வறுமை, ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதில் விஜய்க்கு இருக்கும் ஆர்வத்தைக் குறிப்பிட்டு, அவரது அணுகுமுறையையும் அவர் பாராட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

