ராகுல்காந்தி மீதான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
- Surendran Sumdraraj
- 17 Aug, 2026
புதுடெல்லி, ஆக. 17-
காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான சொத்து குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அலகாபாத் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து ராகுல்காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு எதிரான சொத்து குவிப்பு குற்றச்சாட்டுகளை மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு முன்பு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின்போது, ராகுல்காந்தி தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி, இந்த மனு சட்டரீதியான அடிப்படை இல்லாத நடவடிக்கை என வாதிட்டார். இதையடுத்து, கர்நாடகாவைச் சேர்ந்த மனுதாரர் எஸ். விக்னேஷ் ஷிஷிர், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், அலகாபாத் ஐகோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை தள்ளிவைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதேபோல், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை எந்த அறிக்கையையும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



