அறிவிப்பாணையைப் பெறுவதற்காக அந்தச் சிறுவன் அங்கு வரவில்லை! சரவணன் மகன் குறித்து MACC

top-news

கோலாலம்பூர், அக் 1: மனிதவளத்துறை முன்னாள் அமைச்சர் எம். சரவணனின் 12 வயது மகனிடம் சொத்து விவரங்களை அறிவிப்பதற்கான அறிவிப்பாணையை (notice) வழங்கியதாகக் கூறப்படுவதை மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) மறுத்துள்ளது. இத்தகைய அறிவிப்பாணைகளைப் பெறுபவர்களுக்குச் சட்டத்தில் குறிப்பிட்ட வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், சரவணனின் மகனின் விஷயத்தில் ஆணையம் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட விவேகமான முடிவை (discretion) மேற்கொண்டதாக MACC-யின் தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமான் தெரிவித்தார்.

சட்டத்தின்படி, ஒரு நபர் பெரியவரா அல்லது குழந்தையா என்பது போன்ற குறிப்பிட்ட வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. உறவினர்கள் அல்லது நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் என்பது மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அந்த 12 வயது சிறுவனின் விஷயத்தில், சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விவேகமான முடிவை எடுத்ததாக அவர் கூறினார். அவரது 12 வயது மகனிடம் அறிவிப்பாணையை வழங்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரவணன், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு MACC ஏற்கனவே அறிவிப்பாணைகளை வழங்கியிருந்ததாகவும், ஆனால் குடும்ப உறுப்பினர்கள் சிலர் வெளிநாட்டில் இருந்ததால் அவர்களால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும் ஹலீம் கூறினார்.

அந்த 12 வயது சிறுவன் MACC தலைமையகத்திற்கு வந்திருந்தது, விசாரணை தொடர்பான அறிவிப்பாணையைப் பெறுவதற்காக அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

அறிவிப்பாணையைப் பெறுவதற்காக அந்தச் சிறுவன் அங்கு வரவில்லை. அவன் தனது பெற்றோருடன் வந்திருந்தான் அவ்வளவே என்று அவர் கூறினார்.

சரவணனின் 12 வயது மகனை அறிவிப்பாணையைப் பெறுவதற்காகத் தலைமையகத்திற்கு வருமாறு கோரியதன் மூலம் MACC தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பி.வேதமூர்த்தி முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.

சொத்து விவரங்களை அறிவிக்குமாறு கோரும் அறிவிப்பாணைகளைப் பெறுவதற்காக, சரவணனும் அவரது குடும்பத்தினரும் திங்களன்று புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்திற்குச் சென்றிருந்தனர்.

குழந்தையின் பெற்றோரான தன்னிடம் அந்த அறிவிப்பாணையை வழங்கியிருக்க முடியும் என்று வாதிட்ட சரவணன், தனது 12 வயது மகனை வரவழைத்த MACC-யின் முடிவை கேள்விக்குள்ளாக்கியிருந்தார்.

வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்பாணைகள் வழங்கப்பட்டன!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *