சென்னையில் பிட்புல் நாய் கடித்ததில் சமையல்காரர் துடிதுடித்து பலி!

top-news
FREE WEBSITE AD

சென்னையில் பிட்புல் ரக நாய் மர்ம உறுப்பை கடித்து குதறியதில் சமையல்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் அதை தடுக்க முயன்ற நாயின் உரிமையாளர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.எம் கார்டன் தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(48). இவர் சமையல் வேலை செய்து வந்தார். வேலையை முடித்து விட்டு வழக்கம் போல் நேற்று மாலை 3 மணியளவில் கருணாகரன் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பூங்கொடி (48) என்பவர் தனது பிட்புல் ரக வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டார்.

இந்நிலையில், திடீரென வீட்டின் முன்பு அமர்ந்திருந்த கருணாகரனை பார்த்தவுடன் நாய் கடும் கோபத்துடன் அவர் மீது சீறிப்பாய்ந்தது. அப்போது உரிமையாளரான பூங்கொடி தடுக்க முயன்றார். அவரால் தடுக்க முடியவில்லை. அதற்குள் நாய் கருணாகரனை துரத்தி சென்று அவரது மர்ம உறுப்பு மற்றும் இடது தொடையை கடித்துக் குதறியது.

மேலும் அதை தடுக்க முயன்ற பூங்கொடியின் கை மற்றும் கால்களையும் கடித்துக் குதறியது. இதைப் பார்த்த பொதுமக்கள் நான்கு புறமும் சிதறி ஓடினர். ஒருகட்டத்தில் பூங்கொடி நாயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் கருணாகரன் உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்.

இதையடுத்து, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் குமரன்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்கு போராடி கொண்டிருந்த கருணாகரன் மற்றும் பூங்கொடியை மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கருணாகரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் மர்ம உறுப்பில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் பூங்கொடி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் குமரன்நகர் போலீசார் சமையல்காரரை கடித்துக் கொன்ற பிட்புல் ரக நாயை மாநகராட்சி ஊழியர்களை வரவழைத்து வலைவீசி பிடித்து நாய்கள் காப்பகத்தில் அடைத்தனர். பின்னர் போலீசார் நாயின் உரிமையாளர் பூங்கொடி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் பிட்புல் நாய் சமையல்காரரை கடித்ததால், அவர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *