கிள்ளான் வர்த்தகர் வீட்டில் புகுந்து கொள்ளையிட்ட கும்பல் குற்றச்சாட்டை மறுப்பு!
- Muthu Kumar
- 26 Oct, 2024
கோலாலம்பூர், அக். 26-
கிள்ளானில் உள்ள ஒரு வர்த்தகர் வீட்டில் ஆயுதங்களுடன் புகுந்து கொள்ளையிட்டதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, பேறு குறைந்த ஒருவர் உட்பட ஐவர் மறுத்து விசாரணைக் கோரினர்.இம்மாத தொடக்கத்தில் கிள்ளானில் உள்ள அந்த வர்த்தகரின் வீட்டினுள் ஆயுதங்களுடன் புகுந்து கொள்ளையிட்டதாக, கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்கள் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
நீதிபதி ஷரிஃபா ஹஸ்விண்டி சைட் ஒமார் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை எம். லிங்கேஸ்வரன் (வயது 23) பிஎஸ் தமிழ் குமரன் (வயது 38), ஜி, சிவா (வயது 33), ஆர். தமிழரசன் (வயது 33) மற்றும் எஸ். நாகேன் (வயது 28) ஆகியோர் மறுத்தனர்.இம்மாதம் 3ஆம் தேதி அதிகாலை 6.16 மணிக்கு, கோலக் கிள்ளான், பண்டமாரானில் உள்ள 54 வயதுடைய வர்த்தகரின் வீட்டினுள் பாராங் கத்திகளுடன் நுழைந்து, 74 ஆயிரம் வெள்ளி மதிப்புடைய வழிபாட்டு சிலைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக அவர்கள் அனைவர் மீதும் கூட்டாக குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரைக்குமான சிறை மற்றும் பிரம்படிகளை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 395/397 கீழான குற்றச்சாட்டை அவர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.தலா ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் தலா 10 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் அவர்களை விடுவித்த நீதிபதி, இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *