விருதுகளைப் பெறக்கூடாது எனும் ஜ.செ.க வின் கொள்கை இன்னும் நடப்பில் உள்ளது!
- Muthu Kumar
- 28 Oct, 2024
கோத்தா கினாபாலு, அக். 28-
ஜசெக மக்கள் பிரதிநிதிகள் தங்களின் சேவைக் காலத்தில் கௌரவ விருதுகளைப் பெறுவதற்குத் தடை விதிக்கும் அதன் கொள்கை இன்னும் அமலில் உள்ளது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ஆண்டனி லோக் நேற்று தெரிவித்தார்.
சபா மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதற்காக அவர்களுக்கு விலக்களிப்பட்டுள்ளது என்பது பொருள் அல்ல. விருதுகளைப் பெறக்கூடாது எனும் ஜசெகவின் கொள்கை இன்னும் நடப்பில் உள்ளது. தங்களைக் கேட்காமல் சபா ஆளுநர் அந்த விருதுகளை வழங்கினார் என்று சபா பிரதிநிதிகள் விளக்கமளித்துள்ளனர் என்று லோக் கூறினார்.
ஜசெகவின் மக்கள் பிரதிநிதிகள் விண்ணப்பம் செய்யாமலேயே சபாவில் மட்டுமல்லாது சிலாங்கூரிலும் ஒருவருக்கு கெளரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த ஜசெக ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு கடந்தாண்டு டத்தோ பட்டம் வழங்கப்பட்டது. அந்த ஆட்சிக்குழு உறுப்பினருக்கு அப்பட்டத்தை வழங்கப் போவதாக சுல்தானே நேரடியாக அறிவித்தார் என்றார் லோக்.
இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில், விண்ணப்பம் செய்யாமலேயே அவருக்கு அப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பட்டம் பெறுவது மீதான ஜசெகவின் கொள்கையை மறுபரிசீலனை செய்வதா இல்லையா என்பது குறித்து விவாதம் செய்யும்படி கட்சியின் அடுத்த மாநாட்டில் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பேன் என்றும் லோக் சொன்னார்.
இப்போதைக்கு அக்கொள்கை இன்னும் நடப்பில்தான் இருக்கின்றது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஜசெகவின் ஐந்து அமைச்சர்களுக்கு எந்த பட்டமும் இல்லை. சபாவைச் சேர்ந்த ஒரு துணையமைச்சருக்கு மட்டுமே அப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு எந்தப் பட்டமும் கிடையாது. நான் “டத்தோ” அல்ல, வெறும் 'இஞ்சே” தான் என்று கோத்தா கினாபாலுவில் 66 நடைபெற்ற சபா ஜசெகவின் சிறப்பு மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசியபோது லோக் கூறினார்.
ஜசெக தலைவர்கள் பட்டங்களைப் பெறுவதற்காக அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. பட்டங்கள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *