அன்று ஜாஹிட் பேசிய பேச்சு... இப்போது பலிக்கிறது! - ஓம்ஸ் பா.தியாகராஜன்
- Shan Siva
- 05 Sep, 2026
கிள்ளான், செப் 5: அடுத்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருப்பதை விட, 16 வது பொதுத் தேர்தலை முன்னதாகவே நடத்துவது நல்லது என்று பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி அண்மையில் கருத்து தெரிவித்துள்ளர்.
அதேபோல் பாஸ் கட்சியின் துணைத்தலைவர் துவான் இப்ராஹிமும் ஜாஹிட்டின் இந்தக் கருத்தை ஆதரித்துப் பேசியுள்ளார். நீண்டகால அரசியல் சூழ்ச்சிகளால் மக்கள் சோர்வடைந்திருப்பதாகவும், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாததாலும் முன் கூட்டி தேர்தல் அவசியம் என்று தெரிவித்துள்ளார். அதோடு மாநில தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தலாம் என்பதோடு, செலவும் குறையும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவர்களின் முன்மொழிவுக்கு ஓம்ஸ் அறவாரியத்
தலைவரும், மலேசிய அரிமா
சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா. தியாகராஜன் இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது
கருத்தை முன்வைத்துள்ளார்.
நாட்டின் செலவு குறித்து அக்கறையோடு இப்போது பேசுகிறவர்கள்.
இத்தனை ஆண்டுகாலம் ஊழல் ஊழல் என்று மக்கள் பணத்தை வாரிச் சுருட்டினார்களே...
அரசாங்கத்திற்கு ஏற்பட்ட அந்த நஷ்டக் கணக்கை என்னெவென்று சொல்வது.
மக்கள் வரிப்பணத்தை எல்லாம் அள்ளி அள்ளி வாயில்
போட்டுக்கொண்டார்களே?... இதற்கு பதில்
என்ன என ஓம்ஸ் பா.தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.
ஏற்கெனவே ஒரு பிரதமர் உள்ளே இருக்கிறார். இடையில்
கொஞ்சகாலம் வந்து போன பிரதமரும்கூட இப்போது கிலோ கணக்கில் தங்கக்கட்டிகள், கத்தை கத்தையாய் வெளிநாட்டு பணக் கட்டுகள்
என மில்லியன் கணக்கான ஊழல் வழக்கில்
சிக்கியுள்ளார்.
இன்னும் அடுத்தடுத்து ஊழல்கள் அம்பலத்திற்கு
வந்துகொண்டிருக்கின்றன.
தாபோங் ஹாஜி முதல், ஃபெல்டா வரை அத்தனையிலும் பில்லியன் கணக்கில் ஊழல். இதையெல்லாம் எந்த செலவு கணக்கில் இவர்கள்
சேர்ப்பார்கள்? எல்லாம் மக்கள்
பணம்தானே என ஓம்ஸ் பா தியாகராஜன் பல கேள்விகளை முன்வைத்தார்.
முன்கூட்டியே தேர்தல் என ஏன் இப்போது துடிக்கிறீர்கள்.
எங்கே நீங்களும் மாட்டிக்கொள்வீர்கள் என்கிற பயமா? ஒவ்வொன்றாக ஊழல் வழக்குகள் தோண்டப்படுகிறதே, நமக்கும் ஆப்பு
வந்துவிடுமோ என்கிற அச்சத்தில்தான் தேர்தல் அவசரம் காட்டுகிறார்கள் அவர்கள் என
ஓம்ஸ் பா தியாகராஜன் சாடினார்.
மக்கள் பணத்தை திருடி, வீண் விரயம் செய்துவிட்டு இப்போது செலவை மிச்சப்படுத்தலாம்
என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்களே. குற்றமுள்ள
நெஞ்சு குறுகுறுக்கும். அந்தப் பயத்தின் வெளிப்பாடுதான் இதெல்லாம்.
ஒவ்வொரு தேர்தலிலும் ஜெயிக்க வேண்டும் என நீங்கள் நினைப்பதே, நீங்கள் தப்பிக்க
வேண்டுமென்பதற்காகத்தான். மக்கள் நலனுக்காக அல்ல என்பதை மக்களும் அறிவார்கள் என
ஓம்ஸ் பா தியாகராஜன் கூறினார்.
ஏற்கெனவே 15 வது பொதுத்தேர்தல் சமயத்தில் ஜாஹிட், தங்களது கூட்டணி கட்சிகளிடம் பேசிய விவகாரத்தை மக்கள்
மறந்திருக்கமாட்டார்கள். அது காணொளியாகவும் வந்தது.
நாம் தப்பிக்க வேண்டும் என்றால், 15 வது பொதுத்
தேர்தலில் கண்டிப்பாக ஜெயித்தே ஆக
வேண்டும் என ஜாஹிட், தங்களது கூட்டணி
கட்சியினர் ஒவ்வொருவரையும் பார்த்து பேசினார். இதற்கு என்ன அர்த்தம்?
அன்று ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லிச்
சொல்லி குத்திக்காட்டினார். "நான்
மட்டும் குற்றஞ்சாட்டப்பட மாட்டேன். தோக் மாட், நீங்கள் அடுத்த பட்டியலில் இருக்கிறீர்கள் (you are in the waiting
list). தான்ஸ்ரீ விக்கி சிரிக்காதீர்கள், நீங்களும்
இதில் சேர்க்கப்பட்டுள்ளீர்கள் (you are also included). என்ன,
டத்தோஸ்ரீ சரவணன்? கவலைப்படாதீர்கள், கா சியோங் அவர்கள் உங்களை மறக்க மாட்டார்கள், உங்கள்
மீதும் குற்றம் சாட்டப்படும் (you will be charged as well). ஹிஷாம், சிரிக்காதீர்கள் (don't smile) என்று ஜாஹிட்தான் பேசினார். தவளை
தன் வாயால் கெடும் என்பதுபோல ஜாஹிட் கதை ஆகிவிட்டது. இப்போது ஜாஹிட் அன்று சொன்னது
போலவே பட்டியல்கள் தூசு தட்டப்பட்டு ஒவ்வொன்றாய் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்து ஊழல் சமாச்சாரங்கள் அம்பலமாகி வருகிறது.
மாட்சிமை தங்கிய மாமன்னரும் ஊழலை வெளிக்கொண்டுவர சம்மதம் தெரிவித்துவிட்டதாக அறிகிறேன்.
அந்தப் பயம்தான் இவர்களை ஆட்டிப் படைக்கிறது. அந்தப்
பயம்தான் அன்வாருக்கு கடிதம் எழுதியிருப்பதாகச் சொல்லத் தூண்டுகிறது. அந்தப்
பயம்தான் நான் அப்படி இல்லை என அடிக்கடி வீடியோ போட வைக்கிறது என ஓம்ஸ் பா
தியாகராஜன் கூறினார்.
தேர்தலை முன்கூட்டி நடத்துவது குறித்து
பரிசீலிக்கவிருப்பதாக பிரதமரும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஊழலை
வெளிக்கொண்டு வரும் கடமையும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். எத்தனை
அழுத்தங்கள் வந்தாலும் பின்வாங்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்
அன்வாரின் இந்த உறுதியை வரவேற்கிறேன். ஆனால் கடந்த காலங்களில் இப்படி வாக்குறுதி
தந்துவிட்டு அன்வார் அதை நிறைவேற்றவில்லை.
மித்ரா ஊழலை வெளிக்கொண்டு வருவேன் என்று நேரடியாகவே நாடாளுமன்றத்தில்
பேசினார். ஆனால் செய்யவில்லை.
அதேபோல் இப்போது சொல்லியிருப்பதும் வெறும் பேச்சோடு
நின்றுவிடாமல், செயலில் காட்ட
வேண்டும். ஊழல்வாதிகள் அத்தனைபேரையும் அம்பலப்படுத்த வேண்டும். அப்போதுதான்
அடுத்து வருபவர்கள் பயப்படுவார்கள் என ஓம்ஸ் பா தியாகராஜன் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



