உலகின் 7 அதிசயங்களையும் 6 நாள்களில் பார்த்து சாதனை படைத்த அதிசய மனிதன்!

top-news
FREE WEBSITE AD

எகிப்தைச் சேர்ந்த 45 வயதான மக்டி ஈசா என்பவர் உலகின் 7 அதிசயங்களை 6 நாள்கள், 11 மணிநேரம் மற்றும் 52 நிமிடங்களில் சுற்றுலா சென்று பார்வையிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த வியக்க வைக்கும் சாதனையைக் கச்சிதமாக முடிக்க ஒன்றரை ஆண்டுகள் துல்லியமாகத் திட்டமிட்டு செதல்படுத்தியுள்ளார்.  இந்தப் பயணத்தில் விமானம், டாக்ஸி, பஸ் எனப் பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி சீனாவில் இருக்கும் சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிட்டவர், அடுத்த நாளே டிச 7 ம் தேதிஇந்தியாவுக்கு வந்து தாஜ்மஹாலைப் பார்வையிட்டுள்ளார். அங்கிருந்து  டிசம்பர் 8ஆம் தேதி ஜோர்டானில் உள்ள பண்டைய தொல்பொருள் மற்றும் வரலாற்று நகரமான பெட்ராவிற்குச் சென்றுள்ளார்.

பல போக்குவரத்து சிக்கல்கள் ஏற்பட்டபோதும் விடாமல் திட்டமிட்டபடி அடுத்தடுத்த இடங்களுக்கு விரைந்துள்ளார். ரோமில் உள்ள ரோமானிய நினைவுச் சின்னமான கொலோசியத்திற்கு டிசம்பர் 9ஆம் தேதியிலும் பிரேசிலில் மலையின் உச்சியில் நிற்கும் இயேசு கிறிஸ்துவின் மிகப்பெரிய சிலையான 'கிறிஸ்ட் தி ரிடீமர்' பகுதிக்கு டிசம்பர் 10ஆம் தேதியிலும்  பெருவில் கடல் மட்டத்திலிருந்து 2,430 மீட்டர் மலை முகட்டில் அமைந்துள்ள 'மச்சு பிச்சு' பகுதிக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்கும் மற்றும் கடைசியாக மெக்சிகோவில் இருக்கும் வியக்க வைக்கும் மாயன்கள் காலத்து கட்டடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவமான இடமான 'சிச்சென் இட்சாவில்' டிசம்பர் 12 ஆம் தேதியிலும் தனது பயணத்தை முடித்து சாதனை படைத்துள்ளார்.

பெருவில் இருந்து கடைசியாக மெக்சிகோவில் இருக்கும் 'சிச்சென் இட்சா'விற்குச் செல்ல முற்படும்போது பெருவில் மெக்சிகோவிற்குச் செல்லும் விமானத்திற்குத் தாமதமாகச் சென்றுள்ளார். இதனால் விமான நிலைய அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை. பிறகு தனது சாதனையின் முக்கியத்துவத்தையும், தனது கனவையும் அதிகாரிகளிடம் விளக்கி, தன்னை அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். இதைப் புரிந்து கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மக்டி ஈசாவிற்கு அதே விமானத்தில் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.

இப்படியாகப் போக்குவரத்தில் சிறு சிறு தடைகள் வந்தபோதிலும் இந்த உலகின் 7 அதிசயங்களையும் 6 நாள்கள், 11 மணிநேரம் மற்றும் 52 நிமிடங்களில் பார்வையிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவருக்கு முன் பிரிட் ஜாமி மெக்டோனால்ட் என்பவர் உலகின் 7 அதிசயங்களையும் 7 நாள்கள் 4 மணி நேரத்தில் பார்வையிட்டுள்ளார். அவரின் சாதனையை முறியடித்துள்ளார் மக்டி ஈசா.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *