RM 9.5 மில்லியன் ரமணன் பெற்றாரா? அன்வார் நிராகரிப்பு

top-news

கோலாலம்பூர், அக் 21: மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் காவல்துறையில் உள்ள சிலர், வர்த்தகக் குழுக்களுடன் இணைந்து மற்ற தொழிலதிபர்களின் நிறுவனங்களைக் கைப்பற்ற அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் ‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டுகள் குறித்து, பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் உரிய விளக்கமளிக்கவில்லை என்று பெர்சாமா கட்சித் தலைவர் ரஃபிஸி ரம்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் சாதாரண ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் தொடர்பானவை அல்ல என்றும், குற்றக் கும்பல்கள் முக்கிய அமலாக்க அமைப்புகளுக்குள் ஊடுருவியிருப்பதாகக் கூறப்படுவது மிகவும் தீவிரமான விவகாரம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அன்வார், வெளிப்படைத்தன்மை குறைந்த முந்தைய நிர்வாக முறையால், பல ஆண்டுகளாகப் பெருநிறுவனக் குற்றங்களும் சந்தை முறைகேடுகளும் உரிய நடவடிக்கையின்றி நீடித்ததாகக் கூறினார்.

மேலும், கார்ப்பரேட் மாஃபியா நடவடிக்கைகள் எனக் கூறப்படும் சில சம்பவங்கள், பெரும் நிதி வளங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் நிதியமைச்சர் ஒருவருடன் தொடர்புடையவை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஒரு தொழிலதிபரிடமிருந்து மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அன்வார் மறுத்தார். இது ஆதாரமற்ற அரசியல் குற்றச்சாட்டு என்றும் அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட அமைச்சர் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அன்வார் தெரிவித்த நிலையில், உண்மையிலேயே ரமணன் வழக்குத் தொடர்ந்துள்ளாரா என ரஃபிஸி கேள்வி எழுப்பினார். அது தொடர்பாக எந்தச் செய்தியும் வெளியாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *