9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றேனா? ஆதாரம் எங்கே? – ரஃபிஸிக்கு ரமணன் கேள்வி

top-news

கோலாலபூர், அக் 23: கார்ப்பரேட் மாஃபியா விவகாரத்தைத் தீர்ப்பதற்காகத் தொழிலதிபர் விக்டர் சின்னிடம் இருந்து 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகத் தாம் கூறிய குற்றச்சாட்டுக்கு, ரஃபிஸி ரம்லி இதுவரை எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என பிகேஆர் கட்சி உதவித் தலைவரும், மனிதவள அமைச்சருமான  ரமணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு ஏழு மாதங்கள் கடந்துவிட்டதாகவும், இதுவரை அதற்கான ஆதாரத்தை ரஃபிஸி வெளியிடவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துவிட்டு, நீதிமன்ற வழக்குகளில் தோல்வியடைந்த பின்னர் சட்டச் செலவுகளுக்காகப் பொதுமக்களிடம் நன்கொடை கேட்பதாகவும் ரமணன் விமர்சித்தார்.

ரஃபிஸி மீது இதுவரை தாம் சட்ட நடவடிக்கை எடுக்காததற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.

ரஃபிஸி மீது வழக்குத் தொடர்ந்தால், இறுதியில் பொதுமக்களே நன்கொடை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அவருக்காகப் பொதுமக்களைச் சுமையை ஏற்க வைக்க விரும்பவில்லை என்றும் ரமணன் தெரிவித்தார்.

மனிதவள அமைச்சின் பணியாளர் பாராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, ரமணன் தமக்கு எதிராகக் கோரிக்கை அறிவிப்பு கடிதம் எதையும் இதுவரை அனுப்பவில்லை என ரஃபிஸி இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். 

அதற்குப் பதிலளித்த ரமணன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது முக்கியமல்ல என்றும், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா? என்பதே முக்கியம் என்றும் கூறினார்.

ஆதாரமோ உண்மைகளோ இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவிட்டு, பின்னர் பொதுமக்களிடம் உதவி கோருவது என்ன வகையான செயல் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தாம் எந்தச் சம்பளமோ இதர படித்தொகைகளோ பெறாமல் பொதுமக்களுக்குச் சேவையாற்றி வந்துள்ளதாகவும் ரமணன் கூறினார்.

ரஃபிஸியைப் போலத் தாம் தவறான அரசியலில் ஈடுபடவில்லை என்றும், இந்த விவகாரத்திற்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்றாலும், கட்சியின் உதவித் தலைவர் என்ற முறையில் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *