கெடா மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டி!
- Muthu Kumar
- 04 Aug, 2025
(கே. ஆர். மூர்த்தி)
அலோர்ஸ்டார், ஆக.4-
கெடா மாநில சிலம்பக் கழகத்தின் ஏற்பாட்டில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டி 2025ல் 53 பள்ளிகளிலிருந்து 200 மாணவர்கள் பங்கெடுத்ததாக மாநில சிலம்பக்கழகத்தின் செயலாளர் குமாரி போற்றினி சாமிநாதன் தெரிவித்தார்.
இப்போட்டி நேற்று முன் தினம் காலை மணி 7.00 முதல் மாலை மணி 5.00 வரை சுங்கைப்பட்டாணி, தாமான் கெலாடியில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கெடா மாநில சிலம்பக் கழகத்தின் தலைமை பயிற்றுநர் பூ.இரவிந்திரன் மேற்பார்வையில் கெடா மாநில சிலம்பக் கழகத்தின்
தலைவர் தனபாலன் காசியப்பன் தலைமையில் இப்போட்டி நடத்தப்பட்டது.
சிறப்பு வருகையாளர்களாக இந்திய சமுதாய நலன் கருதி சிறப்பான முறையில் சமூக சேவையாற்றி வரும் தொழிலதிபர் டாக்டர் சின்னையா நாயுடு கலந்துகொண்டார்.
இப்போட்டியில் இம்மாநிலத்திலுள்ள ஏழு மாவட்டங்களில் அமைந்துள்ள 20 தமிழ்ப்பள்ளிகள், 25 இடைநிலைப்பள்ளிகள், 2 சீனப்பள்ளிகள், 4 மலாய்ப்பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளிலிருந்து 6 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட 200 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
இவர்கள் அனைவரும் 40 தங்கம் 40 வெள்ளி மற்றும் 120 வெண்கலப்பதக்கங்களுக்கு குறி
வைத்து கோம்பேட் தனித்திறமை, ஜோடி விளையாட்டு, கைவரிசை, ஆயுத விளையாட்டு ஆகிய போட்டிகளில் பங்கு பெற்றார்கள். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுங்கைப்பட்டாணி தாமான் கெலாடி ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் துணைத்தலைவர்
சங்கர் மெடல் மற்றும் பரிசுகளை எடுத்து வழங்கினார்.
கெடா மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 40 மாணவர்கள் இவ்வாண்டு நவம்பர் மாதம் வட மாநில அளவில் பெர்லிஸ் கங்காரில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.இப்போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இப்போட்டிக்கு பிறகு சிறப்பான பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இப்போட்டி சிறப்பாக நடைபெற கெடா மாநில சிலம்பக் கழகத்தின் பொறுப்பாளர்கள், பயிற்றுநர்கள் மற்றும் நீதிபதிகள் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கினார்கள். அதேபோல் இப்போட்டிக்கு மாணவர்களின் பெற்றோர்களும் பேராதரவு வழங்கியுள்ளதாக குமாரி போற்றினி சாமிநாதன் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



