'சிலிக்கான் வேலி ஓபன் 2026' சாம்பியன் ஆனார் சிவசங்கரி
- Shan Siva
- 26 Oct, 2026
கோலாலம்பூர், மலேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, ‘சிலிக்கான் வேலி ஓபன் 2026’ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், ரெட்வுட் சிட்டியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், எகிப்தின் ஃபரிடா முகமதுவை நேர்செட்களில் வீழ்த்தி சிவசங்கரி வெற்றி பெற்றார்.
உலகத் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள சிவசங்கரி, 20-ஆவது இடத்தில் உள்ள ஃபரிடா முகமதுவை 11-7, 11-6, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். இந்த ஆட்டம் 31 நிமிடங்களில் முடிவடைந்தது.
இதன் மூலம், கடந்த ஆண்டு இதே போட்டியின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஒலிவியா வீவரிடம் அடைந்த தோல்விக்கு சிவசங்கரி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சிவசங்கரி, இந்த சீசனின் தொடக்கத்திலேயே பிளாட்டினம் நிலை போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற இலக்கை அடைந்துவிட்டதாகவும், அடுத்ததாக பிளாட்டினம் நிலை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல முயற்சிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
கடந்த மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்த சிவசங்கரி, மகளிர் குழுப் பிரிவிலும் மலேசியா தங்கப் பதக்கம் வெல்ல உதவினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், 27 வயதான சிவசங்கரி 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியையும் உறுதி செய்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

