மலேசியாவில் காற்றுத் தரக் குறியீடு துல்லியமானது – அமைச்சர் விளக்கம்

top-news

கோலாலம்பூர், அக் 22:மலேசியா முழுவதும் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் நிலையங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ காற்று மாசுக் குறியீடு அனைத்துலகத் தரநிலைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குரூப் இதனைத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள 68 கண்காணிப்பு நிலையங்களில், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு அங்கீகரித்த தொழில்நுட்ப முறைகள் மற்றும் தரநிலைகளின் அடிப்படையில் காற்றின் தரம் அளவிடப்படுவதாக அவர் கூறினார்.

இந்த நிலையங்களில் முறையான பராமரிப்பு, செயல்திறன் சோதனை, தர மதிப்பீடு மற்றும் தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், இதன் மூலம் அதிகாரப்பூர்வ காற்று மாசுக் குறியீட்டின் துல்லியமும் நம்பகத்தன்மையும் உறுதிப்படுத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த நிலையங்களின் அளவீடுகள் அனைத்துலகத் தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதாகவும், அதிகாரப்பூர்வ காற்று மாசுக் குறியீடு ஒவ்வொரு மணி நேரமும் புதுப்பிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

துகள்மப் பொருட்களால் ஏற்படும் காற்று மாசைக் கணக்கிடும்போது உலக சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளும் அனைத்துலக சுற்றுச்சூழல் அமைப்புகளின் நடைமுறைகளும் பின்பற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் தரவு மையத்தின் மூலம் அளவீடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன என்றும், தரவுகளில் ஏற்படும் மாற்றங்கள், கருவிகளின் செயல்பாடுகளில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் வழக்கத்திற்கு மாறான பதிவுகள் கண்டறியப்பட்டால் தேவையான திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வ காற்று மாசுக் குறியீட்டின் துல்லியம், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து தெங்காரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மண்ட்ஸ்ரி நாசிப் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *