வேஸ் செயலியைப் பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

top-news

கோலாலம்பூர், அக் 22: மலேசியாவில் அரசு ஊழியர்கள் வேஸ் (Waze) வழிகாட்டிச் செயலியைப் பயன்படுத்துவதற்கான தடையை மீறினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைமை இயக்குநர் ராஜா நுஷிர்வான் சைனல் அபிடின் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவைப் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் கண்காணிப்பார்கள் என்றும், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவை மீறுவது ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

அரசு ஊழியர்கள் வேஸ் செயலியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதன் நோக்கம், இஸ்ரேல் அரசாங்கத் தகவல்களையும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதே என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்திருந்தார்.

வேஸ் நிறுவனத்தின் தரவுக் கட்டுப்பாட்டுச் செயல்பாடுகள் இஸ்ரேல் சட்டத்தின் கீழ் அமைந்துள்ளதால், அரசாங்கத்தின் முக்கியத் தகவல்களையும் மலேசிய மக்களின் தனிப்பட்ட தரவுகளையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

வேஸ் செயலி பயனர்களின் இருப்பிடம், பயணப் பாதைகள் மற்றும் சாதனங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சேகரிப்பதாக ராஜா நுஷிர்வான் தெரிவித்தார். சில சாதன அமைப்புகளைப் பொறுத்து, செயலியை நேரடியாகப் பயன்படுத்தாத நேரங்களிலும் தகவல்கள் சேகரிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

இந்தத் தகவல்களைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலம், பயனர்களின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகளைக் கண்டறிய முடியும் என்றும் அவர் எச்சரித்தார். குறிப்பாக, அரசு ஊழியர்களின் நடமாட்டம் தொடர்பான தகவல்கள் பாதுகாப்பு ரீதியாக மிகவும் முக்கியமானவை என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் வேஸ் செயலியைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிப்பதற்குப் பதிலாக, அதன் பாதுகாப்பு அபாயங்களைப் புரிந்துகொண்டு மக்கள் தாங்களாகவே முடிவெடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் அணுகுமுறை என்றும் அவர் கூறினார்.

வேஸ் செயலிக்கு நாடு முழுவதும் உடனடியாகத் தடை விதிப்பது, செயலி உருவாக்குநர்கள் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் துறையினருக்கு எதிர்மறையான சமிக்ஞையை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, மலேசியர்கள் வேஸ் செயலியை நீக்கிவிட்டு, மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள துஜு (TuJu) போன்ற உள்ளூர் வழிகாட்டிச் செயலிகளைப் பயன்படுத்துவது குறித்தும் அவர் ஊக்குவித்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *