எல்.பி.ஜி.ஏ டூர் சாம்பியன்ஷிப்பைத் தட்டிச் சென்று ஜீனோ திடிகுல் சாதனை
- Tamil Malar (Reporter)
- 24 Nov, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
மியாமி, நவ. 24-
உலகின் முதல்நிலை பெண் கோல்ப் வீராங்கனை ஜீனோ திடிகுல் (தாய்லாந்து) தனது அபாரமான ஆதிக்கத்தைத் தொடர்ந்தார். எல்.பி.ஜி.ஏ டூர் சாம்பியன்ஷிப்பை இரண்டாவது ஆண்டு தொடர்ச்சியாக கைப்பற்றி, பெண்கள் கோல்ப் வரலாற்றிலேயே மிகப் பெரிய பரிசுத்தொகையான 4 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 16 மில்லியன் வெள்ளியை) தனதாக்கினார்.
புளோரிடாவின் நேப்பிள்ஸில் உள்ள டிபுரான் கோல்ப் கிளப்பில் நடந்த இறுதிச் சுற்றில், ஜீனோ 4-அண்டர் பார் 68 என்ற சிறப்பான ஸ்கோரைப் பதிவு செய்தார். நான்கு சுற்றுகளுக்குப் பிறகு மொத்தம் 26-அண்டர் பார் 262 உடன் முடித்த அவர், சக தாய்லாந்து வீராங்கனை பஜாரீ அன்னாருகர்னை 4 ஷாட்கள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளினார்.
23 வயதான ஜீனோ இந்த வெற்றியின் மூலம் 2025 சீசனை அபாரமாக முடித்துள்ளார். தாய்லாந்துக்கு மற்றொரு பெருமை சேர்த்த இந்த இரு வீராங்கனைகளின் போட்டியும் உலகெங்கும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. பெண்கள் கோல்பின் எதிர்காலம் தாய்லாந்து கைகளில் பத்திரமாக உள்ளது என்பதை மீண்டும் நிரூபித்தார் ஜீனோ!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



