நாட்டில் 11 பகுதிகளில் காற்று மாசு அபாய நிலை – சரவாக்கில் அதிகபட்ச பதிவு
- Surendran Sumdraraj
- 14 Sep, 2026
கோலாலம்பூர், செப். 14 –
நாட்டில் புகைமூட்ட நிலை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 11 பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
மலேசிய காற்று மாசுக் குறியீட்டு மேலாண்மை அமைப்பின் தகவலின்படி, சரவாக்கில் உள்ள ஸ்ரீ அமான் மற்றும் செரியான் பகுதிகளில் தலா 174 என்ற அளவில் அதிகபட்ச காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது. கூச்சிங்கில் 135 ஆக பதிவானது.
தீபகற்ப மலேசியாவில் எட்டு பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. சிலாங்கூரின் ஜோகான் செத்தியாவில் 158, கோலாலம்பூர் செராஸில் 153, நெகிரி செம்பிலானின் நீலாயில் 152 மற்றும் செரம்பானில் 147 என பதிவாகியுள்ளது.
மேலும், ஜோகூரின் பாசிர் கூடாங்கில் 145, லார்கினில் 136, புத்ராஜெயாவில் 134 மற்றும் மலாக்காவின் அலோர் காஜாவில் 115 என காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் மேலும் 55 பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் உள்ளதுடன், இரண்டு பகுதிகளில் மட்டுமே நல்ல நிலையில் பதிவாகியுள்ளது.
காற்று மாசுக் குறியீட்டில் 0 முதல் 50 வரை நல்ல நிலை, 51 முதல் 100 வரை மிதமான நிலை, 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலை, 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற நிலை என்றும் 301-க்கு மேல் ஆபத்தான நிலை என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

