ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அரை இறுதி சுற்றில் ஜோகோவிச், சின்னர்!
- Muthu Kumar
- 29 Jan, 2026
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறினார்.அதேவேளையில் முன்னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக், அனிசிமோவா ஆகியோர் கால் இறுதி சுற்றில் தோல்வி அடைந்தனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 11-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 4-ம் நிலை வீரரும் 10 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 5-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரென்சோ முசெட்டியுடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஜோகோவிச்சுக்கு கடும் சவால் கொடுத்தார் முசெட்டி. முதல் 2 செட்களையும் 6-4, 6-3 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 3-வது செட்டில் முசெட்டி 1-3 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த போது மேல் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் ஜோகோவிச் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதியில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 8-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-3, 6-4 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதி சுற்றில் ஜன்னிக் சின்னர், நோவக் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 5-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவுடன் மோதினார். ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எலெனா ரைபகினா 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இகா ஸ்வியாடெக்கை தோற்கடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதி சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா, 6-ம் நிலை வீராங்கனையான சகநாட்டைச் சேர்ந்த ஜெசிகா பெகுலாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஜெசிகா பெகுலா 6-2, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் அனிசிமோவாவை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால்பதித்தார். அரை இறுதி சுற்றில் எலெனா ரைபகினா - ஜெசிகா பெகுலா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



