காமராஜர் நினைவு நாள்: அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி
- Surendran Sumdraraj
- 02 Oct, 2026
சென்னை, அக். 2 –
பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். எளிமை, நேர்மை, தன்னலமற்ற மக்கள் சேவை மற்றும் கல்வி வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் இன்றும் தலைமுறைகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், ஏழை எளிய மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு காமராஜர் அளித்த பங்களிப்பு அளப்பரியது என்று குறிப்பிட்டுள்ளார். அணைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தமிழகத்தின் அடித்தள வளர்ச்சிக்கும் அவர் முக்கிய பங்காற்றியதாகத் தெரிவித்தார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக அரசியல் வரலாற்றில் நேர்மை, எளிமை மற்றும் மக்கள் நலனின் அடையாளமாக காமராஜர் திகழ்ந்ததாக புகழாரம் சூட்டினார். இந்திய அரசியலில் அவரது தன்னலமற்ற உழைப்பும் தியாகமும் என்றென்றும் நினைவுகூரப்படும் என்றும் தெரிவித்தார்.
கே. அண்ணாமலை, அரசுப் பள்ளிகள், மதிய உணவுத் திட்டம், நீர்ப்பாசனம் மற்றும் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் காமராஜர் தொலைநோக்குடன் செயல்பட்டதாக கூறினார். இதேபோல் சீமான் மற்றும் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட தலைவர்களும் காமராஜரின் கல்வி, வேளாண்மை, தொழில் வளர்ச்சி மற்றும் பொதுவாழ்வு சேவைகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

