மேகதாது அணை திட்டத்தில் கர்நாடகம் தீவிரம்: திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தாக்கல்
- Surendran Sumdraraj
- 20 Aug, 2026
பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடக அரசு மீண்டும் தாக்கல் செய்துள்ளது.
சுமார் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் மூலம் 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதும் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி. நீரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாகத் தாக்கல் செய்யப்பட்ட திட்ட அறிக்கையில் சில தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாகக் கூறி மத்திய அரசு அதனை திருப்பி அனுப்பியது. இதையடுத்து கர்நாடக அரசு தேவையான திருத்தங்களை மேற்கொண்டு புதிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
திருத்தப்பட்ட அறிக்கையின்படி, திட்டத்தால் சுமார் 12,500 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேகதாது பகுதியில் சுமார் 8.90 லட்சம் மரங்கள் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக மாற்று வனப்பகுதி நிலம் ஒதுக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



