கரூர் சம்பவம்: அரசுப் பணி வழங்கியதை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, ஆக. 14 —

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு வழங்கிய கருணை அடிப்படையிலான அரசுப் பணியை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கடந்த மாதம் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டது.

இந்த நியமனங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட மூவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதற்கான அரசாணையை கடந்த மாதம் 27ஆம் தேதி ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் ஜே.பி. பார்த்திவாலா, கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழக்கை விசாரித்தது.

அப்போது, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதில் மனுதாரருக்கு என்ன பிரச்சினை என்றும், அரசுப் பணி வழங்கக் கூடாது எனக் கூறுவதற்கு மனுதாரருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், கரூர் கூட்ட நெரிசல் மிகவும் துயரமான சம்பவம் என்றும், இதுபோன்ற விவகாரங்களில் அரசியல் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைத் தொடர உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *