கோலாலம்பூர், ஜன. 22-
ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவின் முதல் தங்கப் பதக்க இலக்கை நனவாக்கும் முயற்சி மேலும் வலுப்பெற்றுள்ளது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஆரம்பத் தயாரிப்புகளாக, 2026 ஆம் ஆண்டில் ரோட் டு கோல்டு (Road to Gold – RTG) திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் 12 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது.
இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் தௌபிக் ஜோஹாரி கூறுகையில், RTG திட்டம் தேசிய அளவிலான முக்கிய முயற்சியாக தொடர்ந்து செயல்படும் என்றும், உலக தரவரிசையில் முன்னணி இடங்களில் உள்ள உயர்தர (எலீட்) விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
விளையாட்டு வீரர்களின் முழுமையான தயாரிப்பை உறுதிப்படுத்த, பயிற்சி, அனைத்துலக போட்டிகளில் பங்கேற்பு, விளையாட்டு அறிவியல், விளையாட்டு மருத்துவம், வீரர்களின் நலன் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான ஆதரவு வழங்கப்படும் என அவர் கூறினார். இதன் மூலம், ஒலிம்பிக் தயாரிப்புகள் கட்டங்களாகவும் திட்டமிட்ட முறையிலும் முன்னெடுக்கப்படும் என்றார்.
“ஆரம்ப கட்டத் தயாரிப்புகளை மேலும் ஒழுங்குபடுத்தி செயல்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டுக்கான RTG திட்டத்திற்கு அரசாங்கம் RM12 மில்லியன் ஒதுக்கியுள்ளது,” என அவர் இன்று நாடாளுமன்றத்தின் வாய்மொழி கேள்வி–பதில் அமர்வில் தெரிவித்தார்.



